2753. | 'நல்கலை மதிஉற வயங்கு நம்பிதன் எல்கலை திருஅரை எய்தி ஏமுற, வற்கலை நோற்றன; மாசு இலா மணிப் பொன்கலை நோற்றில போலுமால்' என்றாள் |
நல்கலை மதிஉற வயங்கு நம்பிதன் - சிறந்த கலைகள் நிரம்பிய முழுமதி போல் விளங்கும் இவ்ஆண்மகனின்; எல்கலை திருஅரை எய்தி ஏமுற - சூரியனைத் தன் ஒளியால் அழிக்கும் அழகிய இடையை இன்பமுற; வற்கலை நோற்றன - மரவுரியே தவம் செய்தன; மாசு இலா மணிப் பொன் கலை நோற்றில போலுமால் என்றாள் - குற்றமற்ற பொன்னாடை தவம் செய்தில போலும் என்றாள் (சூர்ப்பணகை) ஆல் - அசை. நல்கலை மதி உற வயங்கு நம்பி என்பதால் இராமச்சந்திரன் என்ற பெயரின் காரணம் புலப்படும். உற - ஒப்பு. எல் கலை என்பதற்கு இருளை ஓட்டும் எனவும் உரைப்பர். உடலின் நடுப் பகுதியிலிருப்பதால் இடை எனப்பட்டது. பொற்கலை - பொன்பட்டு. இராமன் வனம் புகுமுன் கைகேயி ஏவலால் ஏவல் மகளிர் மரவுரி ஏந்தி வந்ததை 'வற்கலை ஏந்தி வந்தார்' (1747) என்பதும் குகன் பரதன் மரவுரி அணிந்த நிலையில் 'வற் கலையின் உடையானை'க் (2331) கண்டதாகக் காட்டுவதும் இச் சொல்லின் இப்பொருளைக் காட்டும். பூர்சம் எனும் ஒரு வகை மரத்திலிருந்து எடுக்கும் பட்டையாலாகிய ஆடை வற்கலை என்பர். இராமனின் இடையில் மரவுரி அணிந்ததால் அது பொன்னாடை செய்யாத தவத்தைச் செய்தது என, தவத்தைச் செய்வோரை அழிக்கும் அரக்கர் குலப்பெண் மனத்தில் தோன்றுவது வியப்பிற்குரியது. ஏமம் ஏம் என வந்தது இடைக்குறை. இப்பாடலில் தன்மைத் தற்குறிப்பேற்ற அணியும் திரிபு அணியும் வந்துள்ளன. 22 |