2754.'தொடை அமை நெடு மழைத்
     தொங்கல் ஆம் எனக்
கடை குழன்று, இடைநெறி,
     கரிய குஞ்சியைச்
சடை எனப் புனைந்திலன்
     என்னின் தையலா-
ருடை உயிர் யாவையும்
     உடையுமால்' என்றாள்.

    தொடை அமை நெடுமழைத் தொங்கல் ஆம் என - தொடர்ச்சி
பொருந்திய நீண்ட மேகக் கூறுகள் கீழிறங்கிய வரிசை என்று உவமை
கூறும்படி; கடை குழன்று - நுனி சுருண்டு; இடை நெறி கரிய - இடை
இடையே நெறிப்புக் கொண்டு கரிதாக உள்ள; குஞ்சியைச் சடை எனப்
புனைந்திலன் என்னின் -
தன் தலை மயிரைச் சடையாகத் தரித்திலன்
என்றால், தையலாருடை உயிர் யாவையும் உடையுமால் என்றாள் -
பெண்களுடைய உயிர்கள் எல்லாம் அழியும் என்று கூறினாள் -
(சூர்ப்பணகை). ஆல் - அசை.

     உடைதல் - அழிதல், தகர்தல். உயிரும் என்ற உம்மையால் எஞ்சிய
நாண், கற்பு முதலியவற்றையும் தழுவி நிற்கும். சடையாகக் கொள்ளாத
இராமனின் குஞ்சி மகளிர் உயிரை அழிக்கும் என்பதாம். அனுமன்
சீதையிடம் இராமன் குஞ்சி பற்றிக் கூறும் போது' நீண்டு குழன்று நெய்த்து
இருண்டு நெறிந்து செறிந்து நெடுநீலம் பூண்டு புரிந்து சரிந்து கடை சுருண்டு
புகையும் நறும்பூவும் வேண்டும் அல்ல என, தெய்வ வெறியே கமழும்
நறுங்குஞ்சி' (5284) என்பதுடன் இதனை ஒப்பிடலாம்.

     உடை உயிர் என்பதை உடையும் உயிரும் என உம்மைத் தொகை
யாகவும் கொள்வர்.

     இதில் ஏதுத் தற்குறிப்பேற்ற அணி உளது என்பர்.              23