2756. | 'கரந்திலன், இலக்கணம் எடுத்துக் காட்டிய, பரம் தரு நான்முகன்; பழிப்பு உற்றான் அரோ- இரந்து, இவன் இணை அடிப் பொடியும், ஏற்கலாப் புரந்தரன், உலகு எலாம் புரக்கின்றான்' என்றாள். |
இலக்கணம் கரந்திலன் எடுத்துக் காட்டிய பரம் தரு நான்முகன் - உத்தம இலக்கணங்களை எல்லாம் (இவனுடம்பில்) அமைத்து விளங்கச் செய்த மேன்மை பொருந்திய நான்முகன்; பழிப்பு உற்றான் அரோ - இகழப்பட்டவன் ஆனான் அல்லவா? (ஏனெனில்); இவன் இணை அடிப் பொடியும் இரந்து ஏற்கலாப் புரந்தரன் - இவனுடைய திருவடித்தூசின் பெருமையை வேண்டியும் பெற முடியாத தேவேந்திரன்; உலகு எலாம் புரக்கின்றான் என்றாள் - மூவுலகங்களையும் ஆட்சி புரிகின்றான் என்று கருதினாள். (சூர்ப்பணகை). காட்டிய - உண்டாக்கிய, படைத்த. பழிப்புற்றமை - இவன் கால் தூசிக்கு ஒப்பாகாத இந்திரன் மூவுலகுக்கும் அரசுரிமை பெற்றுள்ளான். உத்தம இலக்கணங்கள் கொண்ட இவனோ காட்டிலே திரிகின்றான். எனவே அவ்வாறு படைத்த பிரமனின் தொழில் பயனற்றதாக இகழ்ச்சிக்கு இடந்தந்தது. பரந்தரு நான் முகன் - பரம் பொருளாம் திருமாலால் பெறப்பட்ட பிரமன் எனலுமாம். தேவேந்திரன் தேவருலகிற்கு மட்டுமின்றி மூவுலகிற்கும் அரசன் என்பது புராணமரபு. அரோ - வினாப் பொருளில் வந்தது; இதனைப் பொது நோக்கில் அசை என்பாரும் உளர். 25 |