சூர்ப்பணகையின் காம வெறி 2757. | நீத்தமும் வானமும் குறுக, நெஞ்சிடைக் கோத்த அன்பு உணர்விடைக் குளிப்ப மீக்கொள, ஏத்தவும், பரிவின் ஒன்று ஈகலான், பொருள் காத்தவன், புகழ் எனத் தேயும் கற்பினாள். |
நீத்தமும் வானமும் குறுக - கடல் நீரும் ஆகாயமும் குறைந்தவையாய்த் தோன்றும் வண்ணம்; நெஞ்சிடைக் கோத்த அன்பு உணர்விடைக் குளிப்ப மீக்கொள - மனத்திலே தொடர்ச்சியாகக் கொண்ட அன்பு வெள்ளம் அறிவிலே மூழ்கும்படி மிகுதியாக; ஏத்தவும் பரிவின் ஒன்று ஈகலான் பொருள் காத்தவன் புகழ் என - இரப்போர் தன்னைப் புகழவும் அவர்களிடத்து இரக்கத்தோடு ஒரு சிறிதும் கொடுக்காதவனாய்த் தன் செல்வத்தைக் காத்து நின்றவன் புகழைப் போல; தேயும் கற்பினாள் - குறைந்தழியும் கற்பையுடையவளாம் (சூர்ப்பணகை). கற்பு - உறுதிப்பாடு. பெருமைக்குக் கடலும் வானமும் எல்லை ஆயின. இதனை 'நன்மை கடலின் பெரிது' (குறள். 103), 'வான் உயர் தோற்றம்' (குறள். 272) என்ற குறள்களுடன் ஒப்பிட்டுணரலாம். இராமனின் அழகைச் சூர்ப்பணகை பலவாறு எண்ணியதால் அவளுடைய ஆசை வெள்ளம் கடலையும் வானையும் கடந்து நின்றது. அதனால் அறிவழிந்து கற்பொழிந்தாள். இந்நிலையைக் கவிஞர் தன்னைப் பாடி வந்தவர்க்குப் பரிசில் தராமல் பொருளைப் பாதுகாத்தவனின் புகழ் தேய்வதற்கு ஒப்பிடுவர். இப்பாடலில் உயர்வு நவிற்சி அணியும், உவமை அணியும் அமைந்துள்ளன. 26 |