2758. | வான்தனில், வரைந்தது ஓர் மாதர் ஓவியம் போன்றனள்; புலர்ந்தனள்; புழுங்கும் நெஞ்சினள்; தோன்றல்தன் சுடர் மணித் தோளில் நாட்டங்கள் ஊன்றினள், பறிக்க ஓர் ஊற்றம் பெற்றிலள், |
வான்தனில் வரைந்தது ஓர் மாதர் ஓவியம் போன்றனள் - ஆகாயத்தில் தீட்டியதொரு பெண் வடிவான சித்திரத்தை ஒத்து; புலர்ந்தனள் புழுங்கும் நெஞ்சினள் - மனம் வாடி வெதும்பும் மனமுடையவளாய்; தோன்றல் தன் சுடர் மணித் தோளின் நாட்டங்கள் ஊன்றினள் - இராமனின் ஒளி விளங்கும் அழகிய தோள்களில் தன் கண்களைப் பதிய வைத்தவளாய்; பறிக்க ஓர் ஊற்றம் பெற்றிலள் - (அவற்றை) மீட்டிடத் தக்கதொரு வலிமை பெறாதவளாயினாள் (சூர்ப்பணகை) நாட்டம் - கண். ஊற்றம் - ஊன்று கோல், பற்றுக் கோடு. இங்கு வன்மை எனும் பொருளில் வந்தது. மாதர் - காதல் எனும் பொருளும் உரைப்பர். அழகு எனவும் கொள்வர். ஓவியம் என்பது அசைவற்ற நிலையைச் சுட்டும். இவ்வாறு எண்ணும் நிலையில் கொடிய அரக்கி உருவில் தான் இருந்தாள் என்பதை இனி வரும் பாடலில் (2760) 'எயிறுடை அரக்கி, எவ் உயிரும் இட்டது ஓர் வயிறுடையாள்' என வருவதால் உணரலாம். இராமன் தோளில் பதித்த கண்ணை வாங்கும் வலிமை அற்றிருந்தாள். 'தோள் கண்டார் தோளே கண்டார்' (1081) என உலாவியற் படலத்தில் இராமனைக் கண்ட மகளிர் நிலை இத்துடன் ஒப்பிடற்பாலது. ஊற்றம் - இலக்கணை. இப்பாடலில் இல்பொருளுவமை அணி அமைந்துள்ளது. சூர்ப்பணகை இராமனைக் கண்டு காமுற்று அவன் தன் மீது அன்பு கொள்ள இவ்வாறு அழகிய உருவம் தாங்கி வந்ததாக வான்மீகத்தில் இல்லை. 27 |