2759. | நின்றனள்-'இருந்தவன் நெடிய மார்பகம் ஒன்றுவென்; அன்று எனின், அமுதம் உண்ணினும் பொன்றுவென்; போக்கு இனி அரிதுபோன்ம்' எனா, சென்று, எதிர் நிற்பது ஓர் செய்கை தேடுவாள். |
நின்றனள் - (இராமன் தோளைப் பார்த்தவாறே) நின்ற அச்சூர்ப்பணகை; இருந்தவன் நெடிய மார்பகம் ஒன்றுவென் - இங்கு இருந்தவனாம் இராமனின் பரந்த மார்பினிடத்தே சேர்ந்து தழுவுவேன்; அன்று எனின் அமுதம் உண்ணினும் பொன்றுவென் - அவ்வாறு தழுவா விடில் சாவா மருந்தாம் தேவாமிர்தத்தை உண்டாலும் இறந்து விடுவேன்; போக்கு இனி அரிது போன்ம் எனா - வேறு வழி இனி எனக்கு இல்லை போலும் என்று எண்ணி; சென்று எதிர் நிற்பது ஓர் செய்கை தேடுவாள் - அவனிடம் சென்று அவனுக்கு எதிரில் நிற்கும் வழியை ஆராய்வாள் ஆனாள். நின்றவள் என்பதற்கு 'வான்தனில் வரைந்தது ஓர் ஓவியம்' போன்று நின்ற நிலையைக் (2758) குறித்தது எனவும் கூறுவர். இருந்தவன் என்பது பன்ன சாலைக்கு அருகே ஓரிடத்தில் தனியே இருந்தவன் எனவும் பெருந்தவம் செய்யும் வடிவில் உள்ளவன் எனவும் ஆம். இவனைக் கூடி மகிழாவிடில் உயிர் விடுவேன் என்று எண்ணுபவள் தான் இறப்பை நீக்கும் அமுதம் உண்டாலும் இவனை அடையா விடில் சாவு உறுதி எனக் கருதியதால் இராமனை அடையும் உபாயத்தைத் தேடினாள். அமுதினும் மிக இனியது இராமனின் சேர்க்கை என்று சூர்ப்பணகை எண்ணியது இதனால் புலனாம். போன்ம் - மகரக் குறுக்கம். (நன். 96) 28 |