சூர்ப்பணகை கோல வடிவம் கொள்ளுதல் 2760. | ' "எயிறுடை அரக்கி, எவ் உயிரும் இட்டது ஓர் வயிறுடையாள்" என மறுக்கும்; ஆதலால், குயில் தொடர் குதலை, ஓர் கொவ்வை வாய், இள மயில் தொடர் இயலி ஆய், மருவல் நன்று' எனா, |
எயிறுடை அரக்கி எவ் உயிரும் இட்டது ஓர் வயிறுடையாள் - கோரப் பற்களை உடைய இந்த அரக்கப் பெண் எல்லா உயிரினங்களையும் இடப் பெற்ற பெரிய வயிற்றை உடையாள்; என மறுக்கும் - என்று எண்ணி இவன் என்னை ஏற்காமல் மறுக்கக்கூடும்; ஆதலால் குயில் தொடர் குதலை - ஆதலின் குயிலைப் போன்ற கொஞ்சும் மொழிகளையுடைய; ஓர் கொவ்வை வாய் - ஒரு கொவ்வைப் பழம் போன்ற சிவந்த வாயுடைய; இளமயில் தொடர் இயலி ஆய் - இளம் மயிலுக்குப் பொருந்திய சாயலுள்ள ஓர் பெண் வடிவங் கொண்டு; மருவல் நன்று எனா - தழுவி ஏற்றுக் கொள்வது நல்ல செயல் என்று எண்ணி; எயிறு என்பதற்குக் கோணற் பற்கள் எனவும் கொள்வர். எவ்வுயிரும் உண்ணும் பெருவயிற்றை உடைய அரக்கி எனத் தன் உருவத்தைக் கண்டு இராமன் விலக்குவான் என முதலில் எண்ணினாள். குயில் தொடர் - குயில் போன்ற உவம வாசகம். குதலையும் மதலையும் ஒரு பொருளாகக் கொள்வாரும் உளர். சிலர் குதலை என்பது எழுத்து வடிவு பெறாத பொருள் விளங்காது இளங்குழந்தை கூறும் சொல். மழலை என்பது எழுத்து வடிவம் பெற்றுச் சொல் வடிவம் பெறாதது என்பர். குயில் தொடர் குதலை... மயில் - இல்பொருளுவமை. 29 |