2761. பங்கயச் செல்வியை
     மனத்துப் பாவியா,
அங்கையின் ஆய
     மந்திரத்தை ஆய்ந்தனள்;
திங்களின் சிறந்து ஒளிர்
     முகத்தள், செவ்வியள்,
பொங்கு ஒளி விசும்பினில்
     பொலியத் தோன்றினாள்.

    பங்கயச் செல்வியை மனத்துப்பாவியா - செந்தாமரை மலரில்
வாழும் திருமகளை உள்ளத்தில் தியானத்து; அங்கையின் ஆய
மந்திரத்தை ஆய்ந்தனள் -
தனக்குச் சித்தியாய் இருந்த அத்திருமகளின்
மூலமந்திரத்தைச் செபித்தாள்; (அதன் பயனாய்) திங்களின் சிறந்து ஒளிர்
முகத்தள் செவ்வியள் -
முழுமதியைவிட மேம்பட்டு விளங்கும்
முகமுடையவளும் அழகியவளுமாய்; பொங்கு ஒளி விசும்பினில்
பொலியத் தோன்றினாள் -
மிக்க ஒளி வானில் பரவி விளங்க வடிவம்
மாறி வெளிப்பட்டாள்.

     திங்களின் சிறந்து - மதியைப் போலச் சிறந்து - என ஒப்புப்
பொருளிலும் கொள்வர். செவ்வி - பருவ அழகின் நிறைவு. அங்கையின்
ஆய மந்திரம் என்பது முன்னர்த் தனக்குச் சித்தியாயுள்ள மந்திரம் -
திருமகள் மந்திரத்தைத் தியானத்தோடு கூறி மிகுந்த அழகு பெற்றாள்.
அழகின் செல்வியாக உள்ள திருமகளை நினைந்து வேண்டும் அழகிய
வடிவம் பெற்றாள் என்பதாம். முதல் நூலில் சூர்ப்பணகை பார்க்கப்
பயங்கரமான முகமுடையவள்; பேரியைப் போலப் பருத்த வயிற்றை
உடையவள்; பார்க்கப் பயங்கரமான கண்களை உடையவள்; நெருப்புக்
கொழுந்து போல் சிவந்து விரிந்து குறுகிய தலைமயிரை உடையவள்;
பார்ப்பவர்களுக்குச் சொல்ல முடியாத வெறுப்பை உண்டாக்கும் வடிவு
கொண்டவள்; அவள் குரல் கேட்பவர்களை மூர்ச்சை அடையச் செய்யும்;
மிகவும் வயது சென்றவள்; கபடமாகப் பேசுபவள்; கெட்ட நடத்தை
உடையவள்; குரூபிகளுக்குள் முதலானவள் என வருணிக்கப் பெறுவாள்.
(வான்மீகம் ஆரண்ய. 17 ஆம் சருக்கம்) இதற்கு நேர் எதிரான வடிவம்
இப்பாடலிலும் அடுத்த பாடலிலும் (2762) தீட்டப் பெற்றுள்ளது.       30