சூர்ப்பணகையின் நடையழகு

கலி முடுகு விருத்தம்

2762. பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர்
     பல்லவம் அனுங்க,
செஞ் செவிய கஞ்சம் நிகர்,
     சீறடியள் ஆகி,
அம் சொல் இள மஞ்ஞை என, அன்னம்
     என, மின்னும்
வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச
     மகள் வந்தாள்.

    பஞ்சி - செம்பஞ்சும், ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க -
விளங்குகின்ற மிகச் செழித்த தளிர்களும் (செம்மையிலும் மென்மையிலும்
தமக்கு ஒப்பாகாமல்) வருந்தும்படி; செஞ்செவிய கஞ்சம் நிகர் சீறடியள்
ஆகி -
சிறந்த அழகுள்ள தாமரைக்கு ஒப்பான சிறிய பாதங்கள்
உடையவள் ஆகி; அம் சொல் இள மஞ்ஞை என - அழகிய
சொல்லுடைய இளமையான மயில் போலவும்; அன்னம் என - அன்னம்
போலவும்; மின்னும் வஞ்சி என - விளங்குகின்ற வஞ்சிக் கொடி
போலவும்; நஞ்சம் என- கொடிய விடம் போலவும்; வஞ்சமகள் வந்தாள்-
வஞ்சனை புரியும் சூர்ப்பணகை அங்கு இராமன் முன் வந்தாள்.

     பஞ்சி எனினும் பஞ்சு எனினும் ஒக்கும். செம்பஞ்சிக் குழம்பூட்டப்
பெற்ற தளிரும் ஒவ்வாது வருந்தும்படி எனவும் உரைப்பர். பஞ்சியும்
பல்லவமும் வருந்தக் காரணம் அவை ஒளி, நிறம், மென்மை, குளிர்ச்சி
ஆகிய பண்புகளால் அவள் அடிகளுக்கு ஒப்பாகாமையாம். செவ்விய
என்பது செவிய என இடைக்குறையாய் வந்தது. சிறுமை+அடி = சீறடி. மயில்
சாயலுக்கும், அன்னம் நடைக்கும் வஞ்சிக்கொடி, துவண்ட நிலைக்கும் நஞ்சு
கொடுமைக்கும் உவமை ஆயின. மயிலை நடைக்கும் திருமுருகாற்றுப்படை
உவமையாகக் கொண்டு 'மயில் கண்டன்ன மட நடை மகளிர் (திருமுருகு.
205, 310) என்று கூறும். நஞ்சு குளிர்ச்சியாக இருந்தும் கொல்லும் என்பர்
(நீதிநெறி. 30).

     இதில் பல உவமைகள் மாலை போல் வந்ததால் மாலையுவமை
அணியாம். இப் பாடலில் காணும் சந்த இன்பம் மெல்லொலி நயம்
வாய்ந்தது.                                                   31