2763. | பொன் ஒழுகு பூவில் உறை பூவை, எழில் பூவை, பின் எழில் கொள் வாள் இணை பிறழ்ந்து ஒளிர் முகத்தாள், கன்னி எழில் கொண்டது, கலைத் தட மணித் தேர், மின் இழிவ தன்மை, இது, விண் இழிவது என்ன, |
பொன் ஒழுகு பூவில் உறை பூவை - பொன்னிறமாய் விளங்கும் செந்தாமரை மலரில் வாழும் திருமகளின் அழகும்; எழில் பூவை - அழகு மிக்க நாகணவாய்ப் புள்ளின் அழகும்; பின் எழில் கொள் - தனக்குப் பிற்படும்படி சிறந்த அழகைக் கொண்ட; வாள் இணை பிறழ்ந்து ஒளிர் முகத்தாள் - இரண்டு வாள்கள் போலக் கண்கள் மாறி மாறி ஒளி வீசும் முகத்தை உடையவளாம் சூர்ப்பணகை; கன்னி எழில் கொண்டது - இளம் பெண்ணின் அழகைக் கொண்டதாக உள்ள; கலைத் தட மணித்தேர் - அழகிய சீலைகளால் ஒப்பனை செய்யப் பெற்ற பெரிய அழகிய தேர்; மின் இழிவ தன்மை இது - மின்னல் கீழிறங்கும் இயல்பை உடையதாய்; விண் இழிவது என்ன - வானிலிருந்து கீழே இறங்கி வருகிறது எனக் கூறும்படி, பொன் - பொன்னிறமான மகரந்தப் பொடி எனவும் கூறுவர். பொன் ஒழுகு என்பதற்கு அழகு மிக்க வழிகின்ற என்றுமாம். கன்னி எழில் கொண்ட கலைத்தடமணித் தேரையுடைய மின் போல விண்ணில் இழிந்தது எனக் கொள்வர். மின் - ஒளியுமாம் கன்னி - இளமை, புதுமை, அழியாத் தன்மை. சூர்ப்பணகை இளம் பெண் வடிவையும் மேகலை சூழ்ந்த அல்குலையும் கொண்ட மின்னல் வானிலிருந்து இறங்கி வந்தது போல் வந்தாள் எனவும் கூறுவர். பொன், பூவை, வாளிணை, தேர் உவமையாகு பெயராகக் கொண்டு பொருள் காண்பர். இதில் உருவக உயர்வு நவிற்சி அணியும், இல்பொருள் உவமை அணியும் உள்ளன. 32 |