2764. | கானில் உயர் கற்பகம் உயிர்த்த கதிர் வல்லி மேனி நனி பெற்று, விளை காமம் நிறை வாசத் தேனின் மொழி உற்று, இனிய செவ்வி நனி் பெற்று, ஓர் மானின் விழி பெற்று, மயில் வந்ததுஎன,-வந்தாள். |
கானில் உயர் கற்பகம் உயிர்த்த கதிர்வல்லி - நறுமணத்தில் சிறந்த கற்பகமரம் பெற்றெடுத்த ஒளி வீசும் காமவல்லி எனும் கொடியின்; மேனி நனி பெற்று - வடிவைத் தான் நன்கு அமையப் பெற்று; விளை காமம் நிறை வாசத் தேனின் மொழி உற்று - மேன்மேலும் விளையும் காம ஒழுக்கம் நிறைந்து நறுமணமிக்க தேன் போலும் சொற்களையும் அடைந்து; இனிய செவ்வி நனி பெற்று - கண்ணிற்கினிய அழகை மிகுதியும் அடைந்து; ஓர் மானின் விழி பெற்று - ஒப்பில்லாத மான் பார்வை போன்ற பார்வையைப் பெற்று; மயில் வந்தது என வந்தாள் - மயில் போலச் சாயலும் நடையும் பெற்று வந்தது போல நடந்து வந்தாள். தேவர் உலகில் கற்பக மரத்தைச் சார்ந்து அதன் மேல் படரும் காமவல்லி என்னும் பூங்கொடி, பெண் வடிவையும் தேன் போன்ற இனிய சொற்களையும் மிகுந்த அழகையும், மானின் பார்வையையும் மயில் நடையையும் அதன் சாயலையும் பெற்று வந்தது போல வந்தாள். உத்தம சாதிப் பெண்களின் உடலில் இயற்கையாக நறு மணம் வீசும் என்பது பண்டைக் காலத்தில் நிலவிய நம்பிக்கையை இது உணர்த்தும். சூர்ப்பணகை தன் பெயரைக் 'காமவல்லி ஆம் கன்னி' எனக் கூறுவாள் (2770) அதற்கேற்ப இப்பாடல் அமைந்துள்ளது. மேற்கண்ட (2761, 2763, 2764) பாடல்களில் ஒன்றுக்கு மேற்பட்ட உவமைகளை அழகுறப் படைத்துள்ளமை காப்பிய அழகை மிகுவிக்கிறது; அரக்கியின் மாயத்தை விளக்கவும் துணைபுரிகிறது. இதில் தன்மைத் தற்குறிப்பேற்ற அணி உளது. 33 |