இராமன் வியப்படைதல் 2765. | 'நூபுரமும், மேகலையும், நூலும், அறல் ஓதிப் பூ முரலும் வண்டும், இவை பூசலிடும் ஓசை- தாம் உரைசெய்கின்றது; ஒரு தையல் வரும்' என்னா, கோ மகனும், அத் திசை குறித்து, எதிர் விழித்தான். |
நூபுரமும் மேகலையும் நூலும் அறல் ஓதிப் பூ முரலும் வண்டும் இவை பூசலிடும் ஓசை - காற்சிலம்பும், இடை அணியும், நூலிற் கோத்த அணிகலன்களும் கருமணல் போன்ற கூந்தலில் சூடும் மலரில் மொய்க்கும் வண்டுகளும் ஆகிய இவை ஆரவாரம் செய்யும் ஓசை; ஒருதையல் வரும் என்னா உரை செய்கின்றது - ஒரு பெண் வருகிறாள் என்று சொல்கிறதாக; கோமகனும் அத்திசை குறித்து எதிர் விழித்தான் - சக்கரவர்த்தி திருமகனாம் இராமனும் அவ்வோசை வந்த திக்கைக் குறித்து எதிர் நோக்கினான். தாம் - அசை. மேகலை - இடையில் அணியும் மணிகள் கோத்த பல வடங்களையுடைய ஓர் அணிகலன். நூல் - பூணூல் போன்று அணியும் பொன் மாலை என்பர். பூசல் - பேரொலி. 'பூசல் வண்டரற்றும் கூந்தல் பொய்ம்மகள்' (2778) என வருதல் காண்க. அணிகலன்களின் ஒலியும் வண்டின் ஒலியும் ஒரு பெண் வருகின்றாள் என்பதைக் கட்டியம் கூறின. உரை செய்தல் - குறிப்பித்தல் எனலுமாம். நூல் - ஆகுபெயர். பேசாததைப் பேசுவது போலக் கூறியது. மரபு வழுவமைதி. 34 |