2766.விண் அருள வந்தது ஒரு
     மெல் அமுதம் என்ன,
வண்ண முலை கொண்டு, இடை
     வணங்க வரு போழ்தத்து,-
எண் அருளி, ஏழைமை துடைத்து,
     எழு மெய்ஞ்ஞானக்
கண் அருள்செய் கண்ணன்
     இரு கண்ணின் எதிர் கண்டான்.

    விண் அருள வந்தது ஒரு மெல் அமுதம் என்ன - தேவருலகம்
கொடுக்க வந்ததான ஒப்பற்ற இனிய அமுதம் போல; வண்ண முலை
கொண்டு இடை வணங்க வருபோழ்தத்து -
அழகிய மார்பகங்களைக்
கொண்டு அதன் பாரத்தால் இடை துவளும்படி அடுத்து வரும் சமயத்தில்;
எண் அருளி ஏழைமை துடைத்து - (திருவுளத்தில்) அருள் கொண்டு
(அதனால்) அடியவர்களின் அறியாமையைப் போக்கி; எழு மெய்ஞ்ஞானக்
கண் அருள் செய் கண்ணன் -
மேலும் வளரும் தத்துவ ஞானமாம்
கண்ணை அளிக்கும் திருமால் அவதாரமாம் இராமன்; இரு கண்ணின்
எதிர் கண்டான் -
இரண்டு கண்களாலும் எதிரே பார்த்தான்.

     அமுதம் தேவரிடத்து இருப்பதால் அவர்கள் அளிக்க வந்தது என்க.
அமுதத்தை முலைக்கு அடையாகக் கொள்வதுடன் அவளுக்கும்
அடையாகக் கொள்ளலாம். ஏழைமை - அறியாமை. கண்ணன் -
எல்லாருடைய கண்களைக் கவரும் அழகுடையவன்; எல்லார்க்கும் அறிவுக்
கண்ணை அளிப்பவன்; பால காண்ட உலாவியற் படலத்தில் 'யாவர்க்கும்
கண்ணன் என்றே ஓதிய பெயர்க்குத்தானே உறு பொருள் உணர்த்தி
விட்டான்' (1068) என வருதல் காண்க. மேலும் யாவர் மாட்டும் கருணை
பொழியும் கண்ணை உடையவன் எனலுமாம். பரம்பொருளாய் நின்று
உலகிற்கு மெய்ஞ்ஞானக் கண் அருள்பவன் தான் எடுத்த மானிடப்
பிறப்பிற்கேற்பப் புரியும் அலகிலா விளையாட்டைக் குறிக்கும். இதனால்
சூர்ப்பணகை மாறு வேடம் கொண்டு மயக்க எண்ணித் தோல்வியுற்றதை
எண்ண இடமுளது. இவளைப் போன்றே மாரீசனும் முயன்று
தோல்வியுறுகிறான். காப்பியப் போக்குக்கு இவர்தம் முயற்சிகள் துணை
புரிகின்றன.                                                35