2767. | பேர் உழைய நாகர்-உலகில், பிறிது வானில், பாருழையின், இல்லது ஒரு மெல் உருவு பாரா, 'ஆருழை அடங்கும்? அழகிற்கு அவதி உண்டோ? நேரிழையர் யாவர், இவர் நேர்?' என நினைத்தான். |
பேர் உழைய நாகர் உலகில் - பெரிய இடமுடைய நாகங்கள் வாழும் பாதலத்திலும்; பிறிது வானில் - அதனில் வேறான சுவர்க்க லோகத்திலும்; பார் உழையின் - நில உலகத்திலும்; இல்லது ஒரு மெல் உருவு பாரா - இல்லாததான ஒப்பற்ற மென்மை பொருந்திய பெண் வடிவைப் (இராமன்) பார்த்து; ஆர் உழை அடங்கும் - இவள் அழகு யாரிடத்து அமையும்?; அழகிற்கு அவதி உண்டோ - இவள் அழகிற்கு எல்லை உள்ளதோ?; நேரிழையர் யாவர் இவர் நேர் என நினைத்தான் - மகளிர் இவளுக்கு ஒப்பானவர் யார் உள்ளார்? என்று எண்ணினான். பேர் - பெருமை என்றதன் நீட்டல் விகாரம். உழை - இடம். அவதி - எல்லை, கீழ், மேல், நடு ஆகிய மூன்று உலகங்களிலும் இப்படிப்பட்ட அழகைக் காணல் அரிது. எனவே இத்தகைய அழகு படைத்தவள் யார் எனத் தன் மானிட அவதாரத்திற் கேற்ப இராமன் எண்ணினான். 'அழகிற்கு அவதி உண்டோ?' என இங்குக் கேட்ட கேள்விக்கு விடை போலப் பின்னர் 'அழகிற்கு எல்லை இல்லை ஆம்' (2791) என்ற தொடர் அமைந்துள்ளது. நேரிழையர் - ஏற்ற அணிகலன் அணிந்த பெண்டிர். ஒத்த ஆடையை உடையவர் எனவும் கொள்வர். (இழை - நூல், நூலின் பெயர் ஆடைக்கு ஆம். கருவியாகுபெயர்). புதிதாகக் கண்ட பெண்ணை மரியாதையுடன் எண்ணும் இராமனின் பண்பிற்கேற்ப யாவர் இவர் நேர் என நினைக்கின்றான். 36 |