சூர்ப்பணகை இராமனை வணங்கி, நாணி, நிற்றல்

2768. அவ் வயின், அவ் ஆசை தன்
     அகத்துடைய அன்னாள்,
செவ்வி முகம் முன்னி, அடி
     செங்கையின் இறைஞ்சா,
வெவ்விய நெடுங் கண்-அயில்
     வீசி, அயல் பாரா,
நவ்வியின் ஒதுங்கி, இறை
     நாணி, அயல் நின்றாள்.

    அவ் வயின் அவ் ஆசை தன் அகத்துடைய அன்னாள் -
அப்போது அந்த இராமன் மீது கொண்ட ஆசையைத் தன் மனத்திற்
கொண்ட சூர்ப்பணகை; செவ்வி முகம் முன்னி - இராமனின் அழகிய
முகத்தை நோக்கி; அடி செங்கையின் இறைஞ்சா - அவன் திருவடியைத்
தன் சிவந்த கைகளால் வணங்கி; வெவ்விய நெடுங்கண் அயில் வீசி
அயல் பாரா -
கொடிய தனது நீண்ட கண்களாம் வேல்களை இராமன் மீது
வீசிப் பின் அவனைப் பாராதது போலப் பார்த்து; நவ்வியின் ஒதுங்கி -
மான்போல ஒருபுறம் விலகி; இறை நாணி அயல் நின்றாள் - சிறிதே
நாணம் கொண்டு அருகே நின்றாள்.

     செவ்வி முகம் முன்னி என்பதைச் சூர்ப்பணகைக்கே ஏற்றித் தன்
அழகிய முகத்தை இராமன் காணும் வகையில் முன் காட்டினாள் எனலுமாம்.
கொடிய கண்ணாம் வேல் கொண்டு தன் காம உணர்வை வெளிப்படுத்தி
ஆண்களை வாட்டுவது மகளிர் இயல்பு. ஆதலால் கண்ணை வேல் என்றார்.
புதிய பொருளைக் கண்டதும் மருளும் இயல்புடையது மான். அதனைப்
போல இவள் இராமனைக் கண்டு ஒதுங்கி நின்றாள் என்பதாம். இது
இவளுடைய மயக்கும் முறைகளில் ஒன்று. சிறிது நாணம் கொண்டதுவும்
இப்பண்பையே சுட்டும். அயல் பாரா என்ற செயலை 'யான் நோக்குங்
காலை நிலனோக்கும் (குறள். 1094) என்பதுடன் ஒப்பிடலாம். அயல்
நின்றாள் என்பதால் இராமனை விட்டு அகலாத விருப்பைப் புலப்படுத்தும். 37