இராமன்-சூர்ப்பணகை உரையாடல் 2769. | 'தீது இல் வரவு ஆக, திரு! நின் வரவு; சேயோய்! போத உளது, எம்முழை ஓர் புண்ணியம்அது அன்றோ? ஏது பதி? ஏது பெயர்? யாவர் உறவு?' என்றான். வேத முதல்; பேதை அவள் தன் நிலை விரிப்பாள்; |
வேத முதல் - வேதங்களுக்கு மூலமான இராமன்; திருசேயோய் - திருமகள் போன்றவளே!; செந்நிறமுடையவளே!; நின்வரவு தீது இல் வரவு ஆக - உன்னுடைய வருகை தீங்கில்லா நல்வரவு ஆகுக; போத உளது எம்முழை ஓர் புண்ணியம் அது அன்றோ - வர உள்ளது எம்மிடத்து ஒரு புண்ணியம் அல்லவா?; ஏதுபதி - எது உன் ஊர்?; ஏது பெயர் - எது உன் பெயர்?; யாவர் உறவு - எவர் உன் உறவினர்?; என்றான் - என்று கேட்டான்; பேதை அவள்தன் நிலை விரிப்பாள் - பேதையளான சூர்ப்பணகை தன்னுடைய தன்மையை விளக்கிச் சொல்வாளானாள். சேயோய் என்பதற்கு அன்னியளே எனவும் உரை காண்பர். அதற்குச் சான்றாகச் (தக்க. பரணி 194 உரை) சேயோய் என்பது தூரியாய் என்றவாறு என்ற பகுதியையும் 'புறத்தார்க்குச் சேயோன்' (திருவா. சிவபுராணம் 8) என்ற தொடரையும் காட்டுவர். 'தீது இல் வரவு ஆக' என்பது தம்மிடம் வந்தோர்க்கு இன்மொழி கூறும் முறைமை பற்றியதாகும். பால காண்டத்தில் கையடைப் படலம்தனில் கோசிக முனியைத் தயரதன் வரவேற்ற பாங்குடன் (319, 320) ஒப்பிடற்குரியது இது. 'வேத முதல்' என்பதற்கு வேதங்களின் சித்தாந்தம் செய்யப்பட்ட முதற் கடவுள் என்பர்; வேதன் முதல் எனப் பாடம் கொண்டு அன்னமாய் வேதத்தை உரைத்தவன் எனப் பிரமனை முதலாகக் கொண்டு குல வரலாற்றைச் சூர்ப்பணகை கூறினாள் என்பர். இராமனைத் தன்னிச்சைக்கு இணங்கச் செய்ய முடியும் என அவள் கருதியதால் பேதை எனப்பட்டாள். 38 |