அறுசீர் விருத்தம்

2770.'பூவிலோன் புதல்வன் மைந்தன்
     புதல்வி; முப்புரங்கள் செற்ற
சே-வலோன் துணைவன் ஆன செங்கையோன்
     தங்கை; திக்கின்
மா எலாம் தொலைத்து, வெள்ளிமலை
     எடுத்து, உலகம் மூன்றும்
காவலோன் பின்னை; காமவல்லி ஆம்
     கன்னி' என்றாள்.

    பூவிலோன் புதல்வன் மைந்தன் புதல்வி - தாமரைப் பூவைத்தன்
இருப்பிடமாய்க் கொண்ட பிரமன் மகனாம் புலத்தியரின் மகன்
விச்சிரவசுவின் மகள் ஆவேன்; முப்புரங்கள் செற்ற சேவலோன்
துணைவன் ஆன செங்கையோன் தங்கை -
திரிபுரங்களை எரித்து
அழித்த காளை மீது ஏறிச் செலுத்தவல்லவனாம் சிவபெருமானின்
நண்பனான சிவந்த கைகளை உடைய குபேரனின் தங்கை ஆவேன்;
திக்கின் மாஎலாம் தொலைத்து வெள்ளிமலை எடுத்து உலகம் மூன்றும்
காவலோன் பின்னை -
எட்டுத்திசைகளிலுள்ள யானைகளின் வலி எலாம்
இழந்து ஓடச் செய்து வெள்ளி மயமான கயிலை மலையைப்
பெயர்த்தெடுத்து மூன்று உலகங்களையும் காக்கும் திறம்படைத்த
இராவணனின் பின் பிறந்த தங்கை ஆவேன்; காமவல்லி ஆம் கன்னி
என்றாள் -
காம வல்லி என்ற பெயரையுடைய கன்னி என்று கூறினாள்.

     பிரமனின் மகன் புலத்தியன். புலத்தியனின் மகன் விச்சிரவசு. அவன்
மகள் சூர்ப்பணகை. மணம் செய்வோர் மூன்று தலைமுறை கூறுவதை
எண்ணித் தன் மணக் குறிப்பையும் வெளியிட்டாள் எனலாம். இராவணனால்
இலங்கையிலிருந்து துரத்தப்பட்ட குபேரன் சிவன்பால் தவம் செய்து அவர்
நண்பனானான். கொடுத்துக் கொடுத்துச் சிவந்ததால் 'செங்கையோன்'
எனப்பட்டான். இராவணனின் வெற்றியையும் ஆற்றலையும் ஆட்சிப்
பெருமையையும் முறையே எட்டுத் திக்கு யானைகளை வென்றமையாலும்
கயிலையை எடுத்தமையாலும் மூவுலகின் காவலாலும் சுட்டினாள் என்க.

     உத்தர காண்டத்தில் புலத்தியன் மகனாம் விச்சிரவசு என்பவன்
சுமாலியின் மகள் கைகசியை மணந்து இராவணன், கும்பகர்ணன்,
சூர்ப்பணகை, வீடணன் ஆகியோரைப் பெற்றனன் என்பதை அறியலாம்.
வியாச பாரதமும் பெருந்தேவனார் பாரதமும் இதுபற்றி வேறுபட்ட
செய்தியைக் கூறும். அவற்றின் படி விச்சிரவசுவிற்கு மூன்று மனைவியர்.
அவருள் புட்போத்கடை என்பவளுக்கு இராவணனும் கும்பகர்ணனும்
பிறந்தனர். மாலினிக்கு வீடணனும் இராகைக்குக் கரனும், சூர்ப்பணகையும்
பிறந்தனர்.                                                  39