2771. அவ் உரை கேட்ட வீரன்,
     ஐயுறு மனத்தான், 'செய்கை
செவ்விது அன்று; அறிதல் ஆகும் சிறிதின்'
     என்று உணர, ' "செங்கண்
வெவ் உரு அமைந்தோன் தங்கை" என்றது
     மெய்ம்மை ஆயின்
இவ் உரு இயைந்த தன்மை இயம்புதி
     இயல்பின்' என்றான்.

    அவ்வுரை கேட்ட வீரன் ஐயுறு மனத்தான் - சூர்ப்பணகை
சொன்ன அச்சொற்களை அறிந்த இராமன் சந்தேகம் கொண்ட
மனமுடையவனாகி; செய்கை செவ்விது அன்று - இவள் செயல்
களங்கமற்றது அன்று; சிறிதின் அறிதல் ஆகும் என்று உணர - சிறிது
கேட்டுத் தெரிவது தகுதி என எண்ணி; செங்கண் வெவ் உரு
அமைந்தோன் தங்கை என்றது மெய்ம்மை ஆயின் -
சிவந்த
கண்களையும் கொடிய வடிவையும் கொண்ட இராவணனின் தங்கை என்பது
உண்மையானால்; இவ் உரு இயைந்த தன்மை இயல்பின் இயம்புதி
என்றான் -
இந்த அழகிய வடிவு பொருந்திய விதத்தை எனக்கு உள்ளபடி
கூறுவாய் என்று சொன்னான்.

     செய்கை - உடம்பு என்பாருமுளர்; தொழிலாகு பெயர். செவ்விதன்று
- மாயையால் அமைந்தது போலும். செங்கண் மிகுந்த சினத்தைக் குறிக்கும்.
சிறிதின் அறிதல் ஆகும் என்பது சிறிய பொழுதில் அறியலாம்
என்பாருமுளர். சூர்ப்பணகையின் அழகிய தோற்றத்திற்கும் இராவணனின்
தங்கை என்று அவள் கூறிய சொல்லுக்கும் இயைபின்மையால் ஐயுற்றான்.
இராமனின் கேள்விகளும் சூர்ப்பணகையின் விடையும் கம்ப நாடகத்தில்
சுவைமிக்க பகுதியாகும்.                                        40