2772. | தூயவன் பணியாமுன்னம் சொல்லுவாள், சோர்வு இலாள்; 'அம் மாய வல் அரக்கரோடு வாழ்வினை மதிக்கலாதேன், ஆய்வுறு மனத்தேன் ஆகி, அறம் தலைநிற்பது ஆனேன்; தீவினை தீய, நோற்றுத் தேவரின் பெற்றது' என்றாள். |
தூயவன் பணியா முன்னம் - பரிசுத்தமான பண்புள்ள இராமன் இவ்வாறு சொன்ன உடனே; சோர்வு இலாள் சொல்லுவாள் - (தக்கவிடைகூறச் சிறிதும்) சலிப்பில்லாதவளாய் விடை கூறுபவளாய்; அம் மாயவல் அரக்கரோடு வாழ்வினை மதிக்கலாதேன் - அந்த மாயையும் கொடுமையும் நிறைந்த அரக்கர்களுடன் வாழ்வதை எண்ணமாட்டாதவளாய்; ஆய்வுறு மனத்தேன் ஆகி (நன்மை தீமையை) ஆராயும் உள்ளம் உடையவள் ஆகி; அறம் தலை நிற்பது ஆனேன் - தரும நெறியில் செல்லும் தன்மை உடையவளான் நான்; தீவினை தீய நோற்றுத் தேவரின் பெற்றது என்றாள் - பாவம் ஒழியத் தவம் செய்து தேவர்களின் அருளால் அடைந்தது (இவ் அழகிய வடிவம்) என்று சொன்னாள். பணித்தல் - கட்டளை. இடுதல் எனவுமாம். தேவரின் பெற்றது - தேவர் போலப் பெற்ற வடிவம் எனவும் உரைப்பர். 'இவ்வுரு இயைந்த தன்மை இயம் புதி இயல்பின்' என முன் பாடலில் (2771) கேட்டதற்கிணங்க இவ்வாறு விடை இறுக்கலானாள். இவ்விடையால் சூர்ப்பணகை தன்னிடம் அரக்கர் போன்று தீக்குணமின்மையும், தீயோர் சேர்க்கை இன்மையும் முதலில் கூறினாள். பின் அத்தீயோர் பண்பிற் கெதிராக அறநெறியில் நிற்பதையும், தவம் புரிந்து தேவர் அளித்ததால் அழகிய வடிவம் பெற்றதையும் கூறித் தான் தூய நிலையில் இருப்பதாய்த் தூயவனாம் இராமனுக்குத் தன் மாய உரையால் விடை கூறினாள். 41 |