| 2773. | 'இமையவர் தலைவனேயும் எளிமையின் ஏவல் செய்யும் அமைதியின், உலகம் மூன்றும் ஆள்பவன் தங்கை ஆயின், சுமையுறு செல்வத்தோடும் தோன்றலை; துணையும் இன்றி, தமியை நீ வருதற்கு ஒத்த தன்மை என்? தையல்!' என்றான். |
தையல் - பெண்ணே!; இமையவர் தலைவனேயும் எளிமையின் ஏவல் செய்யும் - தேவர்களின் தலைவனாம் இந்திரன் கூட இழிந்த நிலையில் ஏவிய சிறு தொழிலையும் செய்யும்படியுள்ள; அமைதியின் உலகம் மூன்றும் ஆள்பவன் தங்கை ஆயின் - மூன்று உலகங்களையும் ஆட்சியில் அடக்கி ஆள்பவனாம் இராவணனின் தங்கை ஆனால்; சுமையுறு செல்வத்தோடும் தோன்றலை - மிக்க செல்வச் சிறப்பின் பெருமிதத்தோடு நீ காணப்படவில்லை; துணையும் இன்றி - தோழியர் காவலர் முதலியவர் இல்லாமல்; தமியை நீ வருதற்கு ஒத்த தன்மை என் என்றான் - தனியளாக இவ்வாறு வருவதற்கு உரிய காரணம் என்ன என்று கேட்டான். தையல் - அலங்கரித்த பெண் எனலுமாம், அழகுடையவள் என்றுமாம், (கலி. 27.19). எளிமையின் ஏவல் செய்தல் என்பது தன்னுயர் நிலை கருதாமல் ஏவிய பணிகளைச் சிறிதும் தடையில்லாமல் அச்சமுடன் அடக்கமாகச் செய்தல். மூவுலகும் ஆள்பவன் தங்கை என்று கூறியதற்கு இணங்கத் தோழிமார் முதலிய பல வகைச் சிறப்புடன் வருதலின்றித் தனியே ஏன் வந்தாய் எனக் கேட்கும் போது இராமனின் ஐயம் நன்கு வெளிப்படுகிறது. 42 |