2774. வீரன் அஃது உரைத்தலோடும்,
     மெய்இலாள், 'விமல! யான் அச்
சீரியரல்லார் மாட்டுச்
     சேர்கிலென்; தேவர்பாலும்
ஆரிய முனிவர்பாலும் அடைந்தனென்;
     இறைவ! ஈண்டு ஓர்
காரியம் உண்மை, நின்னைக் காணிய
     வந்தேன்' என்றாள்.

    வீரன் அஃது உரைத்தலோடும் - வீரனாம் இராமன்
அவ்வார்த்தையைச் சொன்னவுடன்; மெய் இலாள் -
உண்மையில்லாதவளாம் சூர்ப்பணகை; (இராமனைப் பார்த்து) விமல யான்
அச்சீரியரல்லார் மாட்டுச் சேர்கிலென் -
குற்றமற்றவனே! நான் அந்த
நற்பண்பும் நற்செய்கையுமில்லாத அரக்கர்களிடத்து சேர்வேன் அல்லேன்;
தேவர் பாலும் ஆரிய முனிவர் பாலும் அடைந்தனென் - தேவர்கள்
இடத்தும் சிறந்தவராம் முனிவர்களிடத்தும் சேர்ந்துள்ளேன்; இறைவ ஈண்டு
ஓர் காரியம் உண்மை நின்னைக் காணிய வந்தேன் என்றாள் -
தலைவனே! இங்கு ஒரு செயல் எனக்கு ஆக வேண்டி இருப்பதால்
உன்னைக் காண வந்தேன் என்று சொன்னாள்.

     'மெய்இலாள்' என்பதற்கேற்பச் 'சீரியரல்லார் மாட்டுச் சேர்கிலேன்
என்றும் தேவர் பாலும் ஆரிய முனிவர் பாலும் அடைந்தனென் என்றாள்.
'விமல' என்பதற்கேற்பவும் அவன் மனம் கொள்ளுமாறும் அரக்கரைச்
'சீரியரல்லார்' எனக் கூறினாள். தலைவனைக் காண வருவது
அவனுக்குட்பட்டவர் செயலாம். எனவே சூர்ப்பணகை இராவணனைத் தன்
தலைவனாக ஏற்காமல் இராமனைத் தன் தலைவனாக ஏற்றுக் கொண்டாள்
என்பதை இதனால் உணருமாறு செய்கிறாள். முனிவரிடம் சேர்ந்ததால்
எவ்வித ஆடம்பரமின்றி வந்ததையும், 'தமியை நீ வருதற்கு ஒத்த தன்மை
என்' என இராமன் முன்னர்க் கேட்டதற்கு (2773) உரிய விடையாகவும்
இவ்வாறு உரைக்கின்றாள்.                                     43