2775. அன்னவள் உரைத்தலோடும், ஐயனும்,
     'அறிதற்கு ஒவ்வா
நல் நுதல் மகளிர் சிந்தை நல்
     நெறிப் பால அல்ல;
பின் இது தெரியும்' என்னா, 'பெய் வளைத்
     தோளி! என்பால்
என்ன காரியத்தை? சொல்; அஃது இயையுமேல்
     இழைப்பல்' என்றான்.

    அன்னவள் உரைத்தலோடும் - சூர்ப்பணகையாம் அவள் அவ்வாறு
சொன்னதும்; ஐயனும் - இராமனும்; நல் நுதல் மகளிர் சிந்தை நல்
நெறிப் பால அல்ல -
அழகிய நெற்றியை உடைய பெண்களின் மனக்
கருத்துக்கள் நல்வழியில் செல்வன அல்ல; அறிதற்கு ஒவ்வா -
ஆண்களால் எளிதில் அறிய முடியாதன; பின் இது தெரியும் - பிறகு
இதனைத் தெரியக் கூடும்; என்னா - என்று எண்ணி; 'பெய் வளைத்
தோளி' என்பால் என்ன காரியத்தை -
வளைகள் அணிந்த தோளை
உடையவளே! நீ என்னிடம் என்ன செயலை எண்ணி வந்துள்ளாய்?; சொல்
அஃது இயையுமேல் இழைப்பல் என்றான் -
அதனைச் சொல்வாயாக.
அது செய்யத் தக்கதானால் செய்வேன் என்று கூறினான்.

     'மகளிர் சிந்தை அறிதற்கு ஒவ்வா' என்ற பொதுக் கொள்கை
சிந்தாமணியில் காணும் 'பெண்ணெனப் படுவ கேண்மோ பீடில பிறப்பு
நோக்கா உண்ணிறையுடைய வல்ல வொராயிர மனத்த வாகும்' (சீவக. 1597)
எனும் கருத்துடன் ஒப்பிடற் பாலது. பின் இது தெரியும் என எண்ணியதும்
'இயையுமேல் இழைப்பல்' என உரைத்தலும் இராமனின் திறத்தை
வெளிப்படுத்தும். இராமன் கொண்ட ஐயத்தை முன்னரே உள்ள செய்யுள்
(2771) காட்டும்.

     வளைத் தோளி - அன்மொழித் தொகை. இங்கு அண்மை விளியாய்
வந்துள்ளது. காரியத்தை - காரியத்தை உடையாய் - முன்னிலைக் குறிப்பு
வினைப் பொருளில் ஐ விகுதி பெற்று வந்தது. இசையு மேல் இசைப் பென்
எனப் பாடம் கொண்டு இராமன் தன் ஆற்றலுக்கு ஒத்ததாயின் ஒப்புக்
கொள்வேன் என்று கொள்வாரும் உளர்.                          44