2776.'தாம் உறு காமத் தன்மை தாங்களே
     உரைப்பது என்பது
ஆம் எனல் ஆவது அன்றால், அருங் குல
     மகளிர்க்கு அம்மா!
ஏமுறும் உயிர்க்கு நோவேன்; என் செய்கேன்?
     யாரும் இல்லேன்;
காமன் என்று ஒருவன் செய்யும் வன்மையைக்
     காத்தி' என்றாள்.

    (சூர்ப்பணகை) தாம் உறு காமத் தன்மை தாங்களே உரைப்பது
என்பது -
பெண்கள் தாம் கொண்ட காம வேட்கையின் தன்மையைத்
தாங்களே வெளிப்படையாகக் கூறுவது என்பது; அருங்குல மகளிர்க்கு
ஆம் எனல் ஆவது அன்று -
அரிய குலத்திற் பிறந்த பெண்களுக்குப்
பொருந்துவது என்பது நடக்கக் கூடியது அன்று; (ஆயின்) ஏமுறும்
உயிர்க்கு நோவேன் என் செய்கேன் யாரும் இல்லேன் -
எல்லா
இன்பத்தையும் அடையக் கூடிய உயிரோடு கூடி வாழ்வதற்காக
வருந்துவேன், என்ன செய்ய வல்லேன். எனக்குத் துணையென யாரும்
இல்லாதவளானேன்; காமன் என்று ஒருவன் செய்யும் வன்மையைக்
காத்தி என்றாள் -
மன்மதன் என ஒருவன் செய்கின்ற கொடுமையைத்
தடுத்துக் காப்பாற்றுவாய் எனக் கூறினாள்; ஆல் - அசை; அம்மா -
வியப்பிடைச் சொல்.

     'ஆம் எனல் ஆவது அன்று' என நீண்ட தொடராகக் கூறுவதன்
நோக்கம் பொருந்துவது அன்று என்ற பொருளைச் சுட்டும் நோக்குடையது.
தன் காமத்தைத் தானே சொல்லத் துணிந்தமையால் இவ்வாறு பல
சொற்களால் தன்னிலையை விரித்து உரைக்கிறாள். 'கன்னியருற்ற நோய்
கண்ணனார்க்கு மஃதின்ன தென்றுரையலர்' (சீவக. 1028) என்ற பாடல்
வரிகளை இப்பாடல் முதலிரண்டடிகளுடன் ஒப்பிடற்குரியது. ஏமுறுதல் -
மயக்கமுறுதலுமாம். ஏக்கம் எனவும் கூறுவர். என் உளக் காதலை
எடுத்துரைத்தற்குரிய தூதுவர் யாருமிலர் எனவும் தன்னிலையைச்
சூர்ப்பணகை எடுத்துரைப்பாள். காமமூட்டித் துன்புறுத்துவதில் பிறர்க்கு
ஒப்பில்லாதவன் என்பதை உணர்த்த 'ஒருவன்' என்றார்.

     ஏம் என்பது ஏமம் என்பதின் விகாரம்.                      45