2777. | சேண் உற நீண்டு, மீண்டு, செவ் அரி சிதறி, வெவ்வேறு ஏண் உற மிளிர்ந்து, நானாவிதம் புரண்டு, இருண்ட வாள்-கண் பூண் இயல் கொங்கை அன்னாள் அம் மொழி புகறலோடும், 'நாண் இலள், ஐயள், நொய்யள்; நல்லளும் அல்லள்' என்றான். |
சேண் உற நீண்டு மீண்டு - பார்வை நெடுந்தூரம் செல்லுமாறு நீண்டு அப்புறம் செல்ல இடமின்றித் திரும்பி; செவ்வரி சிதறி - சிவந்த கோடுகள் பரவி; வெவ்வேறு ஏண் உற மிளிர்ந்து - பலவகைச் சிறப்புப் பொருந்தப் பிறழ்ந்து; நானாவிதம் புரண்டு இருண்ட வாள்கண் - பல் வேறு வகையாய் மாறித் திரும்பி இருள் போல் கருமைநிறம் கொண்ட வாள் போலும் கண்களோடு; பூண்இயல் கொங்கை அன்னாள் - அணிகலன் அணிந்த மார்பகங்களை உடைய அச்சூர்ப்பணகை; அம்மொழி புகறலோடும் - அச்சொற்களைக் கூறியவுடன்; நாண் இலள் ஐயள் நொய்யள் நல்லளும் அல்லள் என்றான் - இவள் வெட்கம் இல்லாதவள் பெரிதும் இழிந்தவள். நல்லவள் அல்லாதவள் என்று இராமன் நினைத்தான். ஏண் - உயர்ச்சி, சிறப்பு. சேண்உற நீண்டு மீண்டு என்பது நாற்புறத்தும் மூக்கு, புருவம், காது போன்ற உறுப்புகள் தடையாக இல்லாதிருப்பின் முகம் முழுதும் கண்கள் நீண்டு பரந்திடும் என்பது இதன் கருத்தாம். வெவ்வேறு பார்வைகள் கொண்டமை நோய் நோக்கு அதற்குரிய நோய் நீக்கும் மருந்து நோக்குப் போன்றவையாகும். (குறள் 1091) ஐ - நுட்பம் ஐயள் நொய்யள் என்பது இழிவின் மிகுதியைச் சுட்டும். சூர்ப்பணகையின் காமக் குறிப்பை அவளது கண்களும் கொங்கைகளும் வெளிப்படுத்தின. நாணம் உயிரினும் சிறந்ததாகப் போற்றப்படுவது. அது சூர்ப்பணகையிடம் இல்லை என இராமன் முதலில் அறிகிறான். எனவே தீயவள் என்று முடிவு செய்கிறான். இப்பாடலை முன்னர்க் கண்ட பாடலுடன் (2768) ஒப்பிடின் சூர்ப்பணகையின் நிலை புலப்படும். 46 |