2778. | பேசலன், இருந்த வள்ளல் உள்ளத்தின் பெற்றி ஓராள்; பூசல் வண்டு அரற்றும் கூந்தல் பொய்ம் மகள், 'புகன்ற என்கண் ஆசை கண்டருளிற்று உண்டோ? அன்று எனல் உண்டோ?' என்னும் ஊசலின் உலாவுகின்றாள்; மீட்டும் ஓர் உரையைச் சொல்வாள்; |
பேசலன் இருந்த வள்ளல் உள்ளத்தின் பெற்றி ஓராள் - (அவ்வாறு எண்ணி மேலும்) பேசாதிருந்த இராமனின் மனத்தின் தன்மையை உணராதவளான; பூசல் வண்டு அரற்றும் கூந்தல் பொய்ம்மகள் - மொய்க்கும் வண்டுகள் ஒலிக்கும் கூந்தலையுடைய பொய்யுருக் கொண்ட சூர்ப்பணகை; புகன்ற என்கண் ஆசை கண்டு அருளிற்று உண்டோ - இவன் என்னிடத்தில் கூறிய சொற்கள் ஆசை உண்டாகி அருள் புரிந்தது ஆகுமோ?; அன்று எனல் உண்டோ - நீ விரும்புவது தக்கது அன்று எனக் கூறுவதாகுமோ?; என்னும் ஊசலின் உலாவுகின்றாள் - என்று இரு வேறுபட்ட எண்ணங்களிடையே ஊஞ்சலைப் போல் முன்னும் பின்னும் தடுமாறும் கருத்துடையவளானாள்; மீட்டும் ஓர் உரையைச் சொல்வாள் - மீண்டும் ஒரு சொல்லைக் கூறுவாள் ஆனாள். பெற்றி - பெருமையும் ஆம். பூசல் - ரீங்கார ஒலி எனவும் ஆம். பொய்ம்மகள் - பொய் பேசும் பெண் எனவும் உரைப்பர். கண்டு - உண்டாகி, 'முனைவன் கண்டது முதல் நூலாகும்' (தொல். சொல். மரபு. 94) ஆசை கொண்டானோ கொள்ளவில்லையோ எனத் தடுமாறும் கருத்து நிலையை 'ஊசலின் உலாவுகின்றாள்' என்பர். உரை - முதனிலைத் தொழிற் பெயர். ஊசல் தடுமாறும் கருத்தைக் குறிப்பதோர் இலக்கணை. 47 |