2779.'எழுத அரு மேனியாய்! ஈண்டு
     எய்தியது அறிந்திலாதேன்;
முழுது உணர் முனிவர் ஏவல் செய் தொழில்
     முறையின் முற்றி,
பழுது அறு பெண்மையோடும் இளமையும்
     பயனின்று ஏக,
பொழுதொடு நாளும் வாளா கழிந்தன
     போலும்' என்றாள்.

    எழுத அரு மேனியாய்! - ஓவியத்தில் தீட்டுதற்கு அரிதான
வடிவழகுடையவனே!; ஈண்டு எய்தியது அறிந்திலாதே - (நீ) இங்கு வந்து
சேர்ந்ததை அறியாதவளாம் நான்; முழுதுணர் முனிவர் ஏவல்
செய்தொழில் முறையின் முற்றி -
எல்லாம் அறிந்த முனிவர்களின்
ஏவலை ஏற்றுச் செய்யும் தொழிலை முறையாக முடித்துக்
கொண்டிருந்ததால்; பழுது அறு பெண்மையோடும் இளமையும்
பயனின்று ஏக -
குற்றமற்ற (என்) பெண் தன்மையோடும் இளம் பருவமும்
பயன்படாமல் போக; பொழுதொடு நாளும் வாளா கழிந்தன என்றாள் -
ஒவ்வொரு நாளும் அதன் சிறுபொழுதும் வீணாகப் போயின என்று
கூறினாள்; போலும் - அசைச்சொல்.

     இராமன் எழுதரு மேனியன் என்பதை 'இவ் எழுத அரிய திருமேனிக்
கருங்கடலைச் செங்கனி வாய்க் கவுசலை என்பாள் பயந்தாள்' (656) என்ற
விசுவாமித்திரர் கூற்றாலும் 'ஓவியத்தில் எழுத ஒண்ணா உருவத்தாய்' (4020)
எனும் வாலி கூற்றாலும் அறியலாம். முன்னர் 'அறந்தலை நிற்பதானேன்'
(2772) என்று சூர்ப்பணகை கூறிய மொழிகள் பொய் என்பதை 'அங்கு
இராமன் எய்தியது அறியாததால் பொழுதொடு நாளும் வாளா கழிந்தன'
என்கிறாள். இராமனைக் கூடினால் தன் பெண்மையும் இளமையும்
பயன்படும் என்று தன் காம உணர்வை வெளிப்படுத்தினாள். சிறு பொழுது
என்பவை காலை, நண்பகல், எற்பாடு, மாலை, இடையாமம், வைகறை
ஆகும். போலும் என்பதை வினாப் பொருளில் வந்த இடைச்சொல்
என்பாருமுளர். முற்றி என்பது முற்ற என்ற எச்சத் திரிபு.              48