2781.'ஆரண மறையோன் எந்தை; அருந்ததிக்
     கற்பின் எம் மோய்,
தாரணி புரந்த சாலகடங்கட
     மன்னன் தையல்;
போர் அணி பொலம் கொள் வேலாய்!
     பொருந்தலை இகழ்தற்கு ஒத்த
காரணம் இதுவே ஆயின், என் உயிர்
     காண்பென்' என்றாள்.

    போர் அணி பொலம் கொள் வேலாய் - போர் செய்தலே தனக்கு
அணிகலமாகக் கொண்ட அழகிய வேலையுடையவனே!; எந்தை ஆரண
மறையோன் -
என் தந்தை வேதங்களை ஓதியுணர்ந்த விசிரவசு எனும்
முனிவர்; அருந்ததி கற்பின் எம்மோய் - அருந்ததி போன்ற கற்பிற்
சிறந்த என் தாய்; தாரணி புரந்த சாலகடங்கட மன்னன் தையல் -
உலகை ஆண்ட சால கடங்கடர் என்னும் அரச குல மரபில் வந்த பெண்;
பொருந்தலை இகழ்தற்கு ஒத்த காரணம் இதுவே ஆயின் - நீ
இசையாமல் என்னை இகழ்ந்து ஏற்றுக் கொள்ளாததற்குத் தக்க காரணம்
இதுவே ஆனால்; என் உயிர் காண் பென் என்றாள் - என் உயிர்
அழியாமல் அதைப் பெற்றவள் ஆவேன் எனச் சூர்ப்பணகை சொன்னாள்.

     எந்தை - விசிரவசு. ஆரண மறையோன் என்பது வெறும் சாதிப்
பெயராய் நின்றது. வேதமோதிக் கொண்டிருந்த புலந்தியன் முன்
திருணபிந்து என்னும் இராசவிருடியின் மகள் நின்று கருவுற்றதால்
அக்காரணம் பற்றி விசிரவசு என்ற விசிரவசு என்ற பெயர் பெற்றார். மோய்-
தாய் குலசேகர ஆழ்வார் தம் பெருமாள் திருமொழியில் (9.9) 'உன்
மோயின் வருத்தமும்' என்று கூறியுள்ளார். வேலோய் - வேல் என்பது
போர்க் கருவிகளுக்குரிய பொதுப் பெயராய் வந்தது. பொருந்தலை -
முற்றெச்சம். அருந்ததி - வசிட்ட முனிவரின் மனைவி. கற்புடை மகளிரில்
சிறப்புடையவளாய் வானில் விண்மீனாய்க் கணவனைப் பிரியாதிருக்கும்
நிலை பெற்றவள். சால - கடங்கட மன்னன் தையல் என்பது சாலகடங்கடை
என்பாளிடம் தோன்றிய அரக்கர் குலத்தில் பிறந்தவனைச் சுட்டும். இது
பற்றிப் பல்வேறு கதைகள் உள்ளன. புலத்தியர் மகனாம் விசிரவசு கதை
வரலாறு இதனைக் காட்டும். சாலகடங்கடர் மன்னராதலின் இராமன் கூறிய
மறுப்பாம் 'அந்தணர் பாவை' என்பதற்குரிய விடையாய் அமைந்து தன்னை
ஏற்குமாறு சூர்ப்பணகை வலியுறுத்துகிறாள்; 'மணம் செய்து கொள்வானாயின்
என் காம வேதனை தணிந்து பிழைத்திடுவேன்' என்றாள். 'என் உயிர்
காண்பென்' என்பதற்குச் 'சாவேன்' என்று பொருளுரைப்பாரும் உளர்.

     சால கடங்கடர் மரபு - அரக்கர் குலத்தில் பிறந்த ஏதி என்பவன்
மகன் வித்யுத் கேசன் என்பவன் சந்தியையின் மகளாம் சாலகடங்கடை
என்பவளை மணந்து சுகேசனைப் பெற்றாள். அவன் மக்களாம் மாலியவான்,
சுமாலி, மாலி என்பவருள் சுமாலியின் மகள் கேகசி என்பவள் இராவணன்,
சூர்ப்பணகை முதலியோரைப் பெற்றனள். மேலும் சாலகடங்கடை
பிள்ளையைப் பெற்றவுடன் தனியே விட்டு விட்டுக் கணவனுடன் சென்றாள்.
யாருமின்றிக் கிடந்த குழந்தையைச் சிவனும் உமையும் எடுத்து அதற்கு
அப்போதே தாய்க்குச் சமமான பருவம் உண்டாக அருள் புரிந்து நீண்ட
ஆயுளையும் வானில் பறந்து செலும் நகரத்தையும் அளித்தனர். அது முதல்
அரக்கர் மகளிர் விரைவிற் கருவுறலும், உடன் மகப்பெறலும், பிறந்த
குழந்தை உடனே தாயின் ஒத்த பருவம் அடைதலும் ஆகிய பேற்றைப்
பெற்றனர். காலங்காலமாகச் சாலகடங்கடர் ஆண்டு வந்ததால் அரச
மரபினர் எனப்பட்டார்.                                       50