2782.அருத்தியள் அனைய கூற, அகத்துறு
     நகையின் வெள்ளைக்
குருத்து எழுகின்ற நீலக் கொண்டல்
     உண்டாட்டம் கொண்டான்,
"வருத்தம் நீங்கு அரக்கர்தம்மில் மானிடர்
     மணத்தல், நங்கை!
பொருத்தம் அன்று" என்று, சாலப்
     புலமையோர் புகல்வர்' என்றான்.

    அருத்தியள் அனைய கூற - ஆசை கொண்ட சூர்ப்பணகை
அச்சொற்களைச் சொல்ல; அகத்துறு நகையின் வெள்ளைக் குருத்து
எழுகின்ற நீலக் கொண்டல் உண்டாட்டம் கொண்டான் -
தன்
உள்ளத்தில் சிரிப்பின் வெண்ணிற இளங் குருத்து மேல் தோன்றுகிறது
என்று தோன்றச் சிரித்த கரிய மேகம் போன்ற இராமன் ஒரு விளையாட்டை
மேற்கொண்டான்; நங்கை - பெண்ணே!; வருத்தம் நீங்கு அரக்கர்
தம்மில் மானிடர் மணத்தல் பொருத்தம் அன்று -
துன்பமில்லாத
இராக்கதரோடு மனிதர் திருமணம் புரிதல் இயைபுடையதன்று; என்று சாலப்
புலமையோர் புகல்வர் என்றான் -
என மிகுந்த அறிவுடையோர்
சொல்லுவர் எனக் கூறினான்.

     அருத்தியள் - இரப்போள் எனப் பொருள்படும். குருத்து - இளம்
கொழுந்து இது இளவொளியுடைமையைக் குறிக்கும் மானிடர் - காசிப
முனிவரின் மனைவிமார்களில் மனு என்பவளிடம் பிறந்தவர் என்பதைக்
குறிக்கும் சொல் என்பர். அரக்கியை மானிடர் மணப்பதற்குக் கணப்
பொருத்தம் தடையாகும். சிரிப்பைப் பெரிதும் வெளிப்படுத்தாமல் மெல்லிய
இயல்பிற்கேற்ப அகத்துறு நகையாக வெளிப்பட்டதைக் குறிக்கும்.
சூர்ப்பணகையின் பேதமை கருதி இங்கு இராமனிடம் நகை தோன்றியது.
கோபம் கொண்டு அவளைத் துரத்தி விடாமல் உடன்படல், மறுத்தல் எனும்
இரு தன்மை உடையவன் போல் வெவ்வேறு காரணங்களைக் கூறிப்
பேச்சை வளர்ப்பதைக் குறிக்கும் 'உண்டாட்டம் கொண்டான்' எனும்
தொடர். குருத்து - இலக்கணை. நீலக்கொண்டல் - உவம ஆகுபெயர்.    51