2783. | 'பராவ அருஞ் சிரத்தை ஆரும் பத்தியின் பயத்தை ஓராது, "இராவணன் தங்கை" என்றது ஏழைமைப் பாலது' என்னா, 'அரா-அணை அமலன் அன்னாய்! அறிவித்தேன் முன்னம்; தேவர்ப் பராவினின் நீங்கினேன், அப் பழிபடு பிறவி' என்றாள். |
அரா அணை அமலன் அன்னாய்! - பாம்பணை மீது பள்ளி கொள்ளும் குற்றமற்ற திருமாலைப் போன்றவனே!; பராவ அரும் சிரத்தை ஆரும் பத்தியின் பயத்தை ஓராது - விரித்துக் கூறுவதற்கு அரிய சிரத்தை என்னும் ஊக்கம் நிரம்பிய பத்தியால் நான் பெற்ற நல்ல பயனை உணராமல்; இராவணன் தங்கை என்றது ஏழைமைப் பாலது என்னா - நான் இராவணனின் தங்கை எனும் ஒரு காரணத்தைக் காட்டி மறுப்பது உன் அறியாமையில் நிகழ்ந்தது என்று கூறி; அப்பழி படுபிறவி - அரக்கர் பிறவியாம் அப்பழிக்கத்தக்க பிறப்பை; தேவர்ப் பராவினின் நீங்கினேன் - தேவர்களை வணங்கித் துதித்ததால் நீங்கி விட்டேன் (இதனை) முன்னம் அறிவித்தேன் என்றாள் - முன்னமே தெரிவித்துள்ளேன் என்று சூர்ப்பணகை சொன்னாள். சிரத்தை ஆரும் பத்தி - சிரத்தையோடு கூடின பத்தி. பழிபடு பிறவி - பாவம் செய்ததால் உண்டான பிறப்பு. ஏழைமைப் பாலது - ஆராய்ச்சி இல்லாததால் உண்டானது என்பதுமாம். அல்லாமல், சூர்ப்பணகை தான் தவத்தால் பெற்ற மரபு வேறுபாட்டை மறந்து 'இராவணன் தங்கை எனக் கூறியது தன் பேதமைப்பாலது என்பதும் ஆம். தன் மரபு மாற்றத்தை முன்னம் அறிவித்தேன் என்றது 'தீவினை தீய நோற்றுத் தேவரின் பெற்றது' (2772) என்பதைச் சுட்டியது. 'பராவரும் வித்தியாதர் பன்னி' என்ற பாட வேறுபாடு கொண்டு சொல்லுதற்கரிய வித்தியாதரப் பெண்ணாவேன் எனப் பொருள் கூறுவர். 52 |