2785.'காந்தர்ப்பம் என்பது உண்டால்;
     காதலின் கலந்த சிந்தை
மாந்தர்க்கும் மடந்தைமார்க்கும் மறைகளே
     வகுத்த கூட்டம்;
ஏந்தல்-பொன்-தோளினாய்! ஈது
     இயைந்தபின், எனக்கு மூத்த
வேந்தர்க்கும் விருப்பிற்று ஆகும்; வேறும் ஓர்
     உரை உண்டு' என்றாள்.

    (மேலும் சூர்ப்பணகை இராமனிடம்) ஏந்தல் பொன் தோளினாய் -
மலை போன்ற அழகிய தோள்களை உடையவனே!; காதலின் கலந்த
சிந்தை மாந்தர்க்கும் மடந்தைமார்க்கும் காந்தர்ப்பம் என்பது உண்டு-
வேட்கையில் ஒன்று பட்ட மனமுடைய ஆடவர்களுக்கும் பெண்களுக்கும்
காந்தருவம் என்பது உள்ளது; மறைகளே வகுத்த கூட்டம் - அது
வேதங்களே வகுத்து வைத்த மணமுறை ஆகும்; ஈது இயைந்த பின்
எனக்கு மூத்த வேந்தர்க்கும் விருப்பிற்று ஆகும் -
இம்மண முறை
நமக்கு நடந்த பின் என் அண்ணன்மார்க்கும் (இது) விருப்புடையதே
ஆகும்; வேறும் ஓர் உரை உண்டு என்றாள் - வேறொரு தனிச்
செய்தியும் உள்ளது என்று சூர்ப்பணகை கூறினாள்; ஆல் - அசை.

     காந்தர்வம் எண் வகைப்பட்ட மணங்களுள் ஒன்று. எட்டு
வகையாவன பிரமம், தெய்வம், பிரசாபத்தியம், ஆரிடம், ஆசுரம்,
காந்தர்வம், இராக்கதம், பைசாசம் என்பன ஆகும். ஒத்த அன்பினராய்த்
தலைவனும் தலைவியும் கொடுப்பாரும் அடுப்பாருமின்றித் தம்மில் கூடும்
கூட்டம் காந்தருவமாகும். யாழோர் கூட்டம் என இதனைக் குறிப்பர். ஏந்தல்
- உயர்ச்சி உடையது. மலைக்குக் காரணப் பெயர். வேந்தர்க்கு என
உரைத்ததால் தான் அரச குலத்தைச் சேர்ந்தவள் என்பதை மீண்டும்
வலியுறுத்திக் கூறியதாகும். முன்னர், இராவணன் குபேரன் ஆகியோர்
தருவதை இராமன் சுட்டியதால் அவன் அவர்க்கு அஞ்சியதாக எண்ணிக்
காந்தர்வ மணத்தால் அவர்களின் விருப்பத்தைப் பின்னர்க் கொள்ள
இயலும் எனக் கூறினாள். முறையற்ற செயலுக்கு வேத முறைப்படி கூறிய
காந்தர்வ மணம் பூண்பது குறித்துச் சூர்ப்பணகை கூறுவது அவளது
பொய்ம்மகளின் (2778) பண்பைப் புலப்படுத்தும்.                    54