2786.'முனிவரோடு உடையர், முன்னே முதிர் பகை;
     முறைமை நோக்கார்;
தனியை நீ; ஆதலால், மற்று அவரொடும்
     தழுவற்கு ஒத்த
வினையம் ஈது அல்லது இல்லை; விண்ணும்
     நின் ஆட்சி ஆக்கி,
இனியர் ஆய், அன்னர் வந்து உன்
     ஏவலின் நிற்பர்' என்றாள்

    (என் தமையன்மார்) முன்னே முனிவரோடு முதிர்பகை உடையர் -
முன்னமே முனிவர்களுடன் முற்றிய பகைமை கொண்டவராவர்; முறைமை
நோக்கார் -
நீதி அறநெறி ஆகிய முறைகளைப் பாரார்; நீ தனியை -
நீயோ இக்காட்டில் தனியனாக உள்ளாய்; ஆதலால் மற்று அவரொடும்
தழுவற்கு ஒத்த வினையம் ஈது அல்லது இல்லை -
ஆகையால் அந்த
அரக்கரோடு நட்புடன் வாழ்வதற்குரிய தந்திரம் இது அல்லாமல் வேறு
இல்லை; (காந்தர்வ மணம் செய்து கொண்டால்) விண்ணும் நின் ஆட்சி
ஆக்கி -
தேவருலகையும் உன் அரசாட்சிக் கீழ் அமைத்து; இனியர் ஆய்-
இனிய அன்பு உன்பால் உடையவர்களாய்; அன்னர் வந்து உன்
ஏவலின் நிற்பர் என்றாள் -
அத்தகையோர் உன்னிடம் வந்து நீ இட்ட
கட்டளைப்படி நடப்பர் எனச் சூர்ப்பணகை சொன்னாள்.

     தவவேடம் பூண்ட இராமனிடம் இராவணன் முனிவர்களிடம் கொண்ட
பகையை முதலில் கூறி அவனோடு நட்பாம் வழி தன்னைக் காந்தர்வ
மணம் முடிப்பதே என உரைத்தாள். மேலும், தன்னை மணப்பதால்
விண்ணரசு செய்யலாம் என ஆசை ஊட்டுகிறாள். அத்துடன் அன்றி
அரக்கரும் இராமன் ஏவல்படி நிற்பர் என வாழ்வில் ஓர் உயர் நிலை
உறுவதையும் சுட்டுகிறாள் இவற்றை ஆக்கிக் கொள்ளும் வினையமாகத்
தன்னை மணந்து கொள்வதே எனச் சுட்டாமல் சுட்டுவாள். வினையம் -
செயல் என்பாருமுளர். விண்ணும் என்பதில் உள்ள எச்ச உம்மையால்
மண்ணும் எனக் கொள்ள இடமுள்ளது. விண்ணும் என்பதைச்
சிறப்பும்மையாகவும் கூறுவர்.                                   55