2787. | 'நிருதர்தம் அருளும் பெற்றேன்; நின் நலம் பெற்றேன்; நின்னோடு ஒருவ அருஞ் செல்வத்து யாண்டும் உறையவும் பெற்றேன்; ஒன்றோ, திரு நகர் தீர்ந்த பின்னர், செய் தவம் பயந்தது?' என்னா, வரி சிலை வடித்த தோளான் வாள் எயிறு இலங்க நக்கான். |
வரிசிலை வடித்த தோளான் - (சூர்ப்பணகை கூறிய மொழிகளைக் கேட்டபின்) கட்டுக்கள் அமைந்த வில் தொழில் பயின்ற தோளை உடைய இராமன்; நிருதர் தம் அருளும் பெற்றேன் - அரக்கர்களின் அருளையும் அடைந்தேன்; நின் நலம் பெற்றேன் - உன்னை அடையும் நன்மையும் அடைந்தேன்; நின்னொடு ஒருவ அருஞ் செல்வத்து யாண்டும் உறையவும் பெற்றேன் - உன்னோடு எக்காலத்தும் நீங்காத பெரும் செல்வத்தை நீங்காது எப்போதும் நிலைத்திருக்கவும் அடைந்தேன்; ஒன்றோ - இது மட்டுமா?; திருநகர் தீர்ந்த பின்னர் செய்தவம் பயந்தது - அழகிய அயோத்தியை நான் நீங்கிய பிறகு நான் செய்த தவத்தின் பயனாய் விளைந்தது போலும்; என்னா வாள் எயிறு இலங்க நக்கான் - என்று சொல்லி ஒளியுள்ள தன் பற்கள் புலப்படச் சிரித்தான். நலம் - அழகும் ஆம். 'சிலைவடிப்ப வீங்கி விரையெனத் திரண்ட தோளான்' என்ற சீவக சிந்தாமணித் (1450) தொடருக்கு நச்சினார்க்கினியர் 'வில்லைப் பயிற்றுதலாற் பெருத்துத் திரண்ட தோளான்' என்று எழுதும் உரை ஒப்பிடற்குரியது. வரிகளாய் சிலைத் தழும்பு உண்டானதென்றும் கூறலாம். அரக்கர் அருளும், அருஞ் செல்வமும். அவள் நலமும் பெறுமாறு தான்செய்த முன்னைய தவம் பலித்தது என எதிர் மறையில் இகழ்ச்சியுற நகைத்தான் இராமன். 56 |