சீதையைக் கண்ட சூர்ப்பணகை கொண்ட எண்ணங்கள் 2788. | விண்ணிடை, இம்பர், நாகர், விரிஞ்சனே முதலோர்க்கு எல்லாம் கண்ணிடை ஒளியின் பாங்கர், கடி கமழ் சாலைநின்றும், பெண்ணிடை அரசி, தேவர் பெற்ற நல் வரத்தால், பின்னர் மண்ணிடை மணியின் வந்த வஞ்சியே போல்வாள், வந்தாள். |
விண்ணிடை இம்பர் நாகர் விரிஞ்சனே முதலோர்க்கு எல்லாம்- வான்உலகத்தும் இம்மண்ணுலகத்தும் பாதல உலகத்தும் பிரமன் முதலிய அனைவர்க்கும்; கண்ணிடை ஒளியின் பாங்கர் - கண்களிடத்து ஒளி வடிவமுள்ள இராமனின் பக்கத்தில்; கடிகமழ் சாலை நின்றும் - நறுமணம் வீசும் பன்ன சாலையிலிருந்து; பெண்ணிடை அரசி - பெண்களின் அரசி போல்வாள்; பின்னர் மண்ணிடை மணியின் வந்த வஞ்சியே போல்வாள்- பின்னர் இம்மண்ணுலகில் பிறந்த இரத்தினத்திலிருந்து தோன்றிய வஞ்சிக்கொடி போன்ற சீதை; தேவர் பெற்ற நல்வரத்தால் வந்தாள் -விண்ணோர் முன் திருமாலிடம் பெற்ற வரம் நிறைவேறும்படி வந்தாள். உறுப்புக்களில் கண் சிறந்ததால் கண்ணிடை ஒளி என இராமன் சிறப்பிக்கப் பெற்றான். கண்ணிலும் விழி சிறந்தது. அவ்விழியினும் அதன் ஒளி மிகச் சிறந்தது ஆம். இதனால் இராமன் எல்லா உயிர்களின் கண் ஒளியாய் விளங்குகிறான் என்பதாம். யாவரும் கண்டு கண் கூசும் படியான ஒளியோடு சீதை பன்னசாலையிலிருந்து வெளியே வந்தாள் என்பதுமாம். இலைக் குடிசைக்கு மணம் வந்தவாறு யாதெனில் அதைச் சுற்றிலுமுள்ள செடி கொடி மரங்களில் பூத்த மலர்களால் வந்ததாம். தேவர் பெற்ற நல்வரம் - சீதை வெளியே வர அது கண்ட சூர்ப்பணகையின் செயல்களால் பல செயல்கள் நிகழ்ந்து இராவணன் சீதையை எடுத்துச் செல்லவும் அதனால் அரக்கர் அழிவும் நிகழ்ந்ததைத் தேவர் பெற்ற நல் வரத்தால் நிகழ்ந்ததாகக் கருதுவர். இனி அவர்கள் பெற்ற நல் வரத்தால் பாற்கடல் விட்டு இம்மண்ணிடைப் பிறந்த சீதை எனவும் உரைப்பர். தேவர் துயரம் நீங்கச் சீதை பிறப்பும் அவள் இராமனை மணந்து காடேகி இராவணனால் கவரக் காரணமாகி அதனால் இராவணாதிகள் அழிவும் உண்டாயிற்று. இதனை அடுத்த பாட்டில் (2789) 'அரக்கர் என்னும் கான் சுட முளைத்த கற்பின் கனலி' எனச்சுட்டும். இவ்வாறு அவதார நோக்கினைக் காப்பியத்தின் பல இடங்களில் அறிவுறுத்துவது மரபு. விண்ணிடை என்பதில் உள்ள இடை என்ற சொல்லை இம்பர், நாகர் முதலிய சொற்களுடன் கூட்டியுரைக்கப் பெற்றது. விரிஞ்சனே என்பதிலுள்ள ஏகாரம் தேற்றப் பொருளில் வந்தது. கண்ணிடை ஒளி என உருவக அணி அமைந்துள்ளது. 57 |