2789. | ஊன் சுட உணங்கு பேழ் வாய் உணர்வு இலி, உருவில் நாறும் வான் சுடர்ச் சோதி வெள்ளம் வந்து இடை வயங்க, நோக்கி, மீன் சுடர் விண்ணும் மண்ணும் விரிந்த போர் அரக்கர் என்னும் கான் சுட முளைத்த கற்பின் கனலியைக் கண்ணின் கண்டாள். |
ஊன் சுட உணங்கு பேழ்வாய் உணர்வு இலி - தன் உடலை (காமத் தீ) எரிக்க அதனால் வாடிய பெரிய வாயையுடைய நல்லுணர்வில்லாத சூர்ப்பணகை; உருவில் நாறும் வான் சுடர்ச் சோதி வெள்ளம் வந்து இடைவயங்க நோக்கி - (சீதையின்) வடிவிலிருந்து வெளித் தோன்றும் பெருஞ்சுடர் ஒளி மயமான பெருக்காக வந்து அவ்விடம் விளங்க அதனைப் பார்த்து; மீன் சுடர் விண்ணும் மண்ணும் விரிந்த போர் அரக்கர் என்னும் - விண்மீன்கள் ஒளிரும் வானமும் நில உலகும் பரவிய போர் செய்யும் கொடிய இராக்கதர் எனும்; கான்சுட முளைத்த கற்பின் கனலியைக் கண்ணின் கண்டாள் - காட்டை அழிக்கப் பிறந்த கற்பு என்னும் தீயாகிய சீதையைத் தன் கண்முன் (வரப்) பார்த்தாள். ஊன்சுட உணங்கு பேழ்வாய் - தசையைப் பதம் செய்து உண்பதற்குப் பதைக்கிற திறந்த வாய் எனவும் கூறுவர். தன்னுயிர் போல் மன்னுயிரைக் கருதாத சூர்ப்பணகையை 'உணர்விலி' என்றார். அரக்கர் குலத்தை அழிக்க வந்த சீதையைச் 'சோதி வெள்ளம்' என்றும் 'கற்பின் கனலி' எனவும் சுட்டினார். இத்துடன் 'பொன்னின் ஒளி. மின்னின் எழில் அன்னவள் தன் ஒளி' எனக் கோலங் காண் படலத்தில் சீதையை வருணித்ததை (1144) ஒப்பிடுக. மேலும் கற்புக்கனலி என்பதைக் காட்டும் வகையில் சூடாமணிப் படலத்தில் (5403) 'அரக்கர் ஆம் இருந்தை வெந்து உக, சனகி எனும் ஒரு தழல்' என்பதையும் ஒப்பிட்டுக் காணலாம். உணர்விலிக்குச் சோதி வெள்ளமாய்க் கனலியாய்த் தென்பட்டாள் சீதை என்பது எண்ணிப் பார்க்கத்தக்கது. 58 |