2790.'மரு ஒன்று கூந்தலாளை வனத்து
     இவன் கொண்டு வாரான்;
உரு இங்கு இது உடையர் ஆக, மற்றையோர்
     யாரும் இல்லை;
அரவிந்த மலருள் நீங்கி, அடி
     இணை படியில் தோய,
திரு இங்கு வருவாள்கொல்லோ?' என்று அகம்
     திகைத்து நின்றாள்.

    மரு ஒன்று கூந்தலாளை வனத்து இவன் கொண்டு வாரான் -
நறுமணம் பொருந்திய கூந்தலை உடைய இவளைக் காட்டிற்கு இவன்
அழைத்து வரமாட்டான்; இது உரு உடையர் ஆக மற்றையோர் இங்கு
யாரும் இல்லை -
இத்தகைய அழகுள்ளவராக வேறு எந்த மகளிரும்
இவ்விடத்தில் இல்லை; திரு அரவிந்த மலருள் நீங்கி அடியிணை படி
யில் தோய இங்கு வருவாள் கொல்லோ -
திருமகள் தான் தங்கும்
செந்தாமரை மலரிலிருந்து புறப்பட்டு இருபாதமும் நிலத்தில் படிய
இவ்விடத்திற்கு வருவாளோ; என்று அகம் திகைத்து நின்றாள் - என
மனம் மருண்டு நின்றாள் சூர்ப்பணகை.

     சீதை மரு ஒன்று கூந்தலாள் என்றதால் உத்தம சாதிப் பெண் என்பது
புலனாம் அவர்கள் கூந்தலில் இயற்கை மணம் உண்டு என்பது மரபு.
நம்மாழ்வார் பாடிய திருவிருத்தத்தில் (55) வைகுந்த மன்னாள் குழல்வாய்
விரைபோல் வண்டுகள் வாரும் மலருளவோ?' என்ற அடிகள் இதனை
விளக்கி நிற்கும். இவன் தன் மனைவி எனின் இத்தகைய
அழகுடையவளைக் காட்டிற்கு அழைத்து வாரான். காட்டிலோ இத்தகைய
அழகிகள் இல்லை. எனவே தான் வழிபடும் திருமகளே இங்கு வந்து
விட்டாளோ என முதலில் சூர்ப்பணகை நினைத்தாள். ஆனால் சீதையின்
அடிகள் நிலத்தில் தோய்ந்ததால் இவள் திருமகள் அல்லளோ எனத்
திகைத்தாள். இனித் திருமகள் தனக்கு அருள வந்தாளோ? அன்றிக்கேடு
புரிய வந்தாளோ எனத் திகைத்தாளுமாம். முதலில் கண்ணில் கண்ட (2788)
சூர்ப்பணகை இப்போது சீதையின் நறுமணத்தை மூக்குப் புலனாலும்
உணர்ந்தாள் மலருள் - வேற்றுமை மயக்கம் கொல் ஓ - வினாக் குறித்து
நின்றன.                                                    59