2791. பண்பு உற நெடிது நோக்கி,
     'படைக்குநர் சிறுமை அல்லால்,
எண் பிறங்கு அழகிற்கு எல்லை இல்லை
     ஆம்' என்று நின்றாள்;
'கண் பிற பொருளில் செல்லா; கருத்து
     எனின், அஃதே; கண்ட
பெண் பிறந்தேனுக்கு என்றால், என்படும்
     பிறருக்கு?' என்றாள்.

    பண்பு உற நெடிது நோக்கி - (சீதையைச் சூர்ப்பணகை) நன்றாக
நீண்ட நேரம் உற்றுப் பார்த்து; படைக்குநர் சிறுமை அல்லால் எண்
பிறங்கு அழகிற்கு எல்லை இல்லை ஆம் என்று நின்றாள் -
பிறப்பிப்போர்க்குக் குறைவே அல்லாமல் கருத்தில் விளங்கும் அழகுக்கு
ஒரு வரையறை கிடையாது ஆகும் என்று சொல்லும் வகையில் இவள்
விளங்கி நின்றாள்; கண்பிற பொருளில் செல்லா - (இவளைப் பார்த்த)
கண்கள் வேறு பொருட்களைப் பார்க்கப் போகா; கருத்து எனின் அஃதே-
மனம் என்றாலும் அதுவும் வேறு தோன்றினும் அங்கே செல்லாது; கண்ட
பெண் பிறந்தேனுக்கு என்றால் என்படும் பிறருக்கு என்றாள் -
பெண்ணாகப் பிறந்த எனக்கு இந்நிலை உண்டானால் இவளைக் கண்ட
ஆடவர்க்கு என்ன ஆகுமோ என வியந்து கூறினாள்.

     இராமனின் அழகில் முதலில் ஈடுபட்ட சூர்ப்பணகை பெண்ணாம்
சீதையின் அழகையும் கண்டு வியக்கிறாள். அவளது எல்லையில்லா
அழகைக் கண்டு அழகைப் படைப்பவரின் குறைவினால் அன்றி அழகுக்கு
எல்லை இல்லை எனக் கருதினாள். மேலும் அழகைப் படைக்கும் ஓவியன்,
சிற்பி, கவிஞன் போன்றவர்கள் கையாளும் கருவிப் பொருள்களாம்,
வண்ணம், கல், சொல் போன்று படைப்பதற்கு எடுத்துக் கொள்ளும்
எல்லைக்குள் அழகு உட்படும், ஆயின் அழகுக்கு எல்லை இல்லை
என்பதுமாம்.

     கண்ணின் வழியே அழகு கருத்தில் பதிகிறது. முன்னர்ப் பால
காண்டத்தில் சீதையின் அழகு குறித்து 'அழகு எனும் அவையும் ஓர் அழகு
பெற்றதே' (513) என்றும், சதானந்த முனிவன் கூற்றில் 'அழகு இவளைத்
தவம் செய்து பெற்றது காண்' (683) என்றும் குறிக்கப் பெற்றுளது. 'கண்
வாங்கு இருஞ் சிலம்பு' (கலி. 39.15) என்னும் அடிக்குப் பார்த்தவர்கள்
கண்ணைத் தன்னிடத்தே வாங்கிக் கொள்ளும் கரியமலை' என
நச்சினார்க்கினியர் உரையும் 'கண் பிற பொருளில் செல்லா' என்பதுடன்
ஒப்பிடற்குரியது. பெண் பிறந்தேனுக்கு என்பதுடன் 'குழவிக்கோட்டு' எனும்
சீவக சிந்தாமணிப் பாடலில் (165) விசயையின் அழகு புலப்படும் பிறையும்
மதியும் கூடினபோல் அழகு கொண்ட நுதலும் முகமும் வாயும் முறுவலும்
மூக்கும் உருப்பசியை உருக்குமே என வருவதையும் ஒப்பிடற் பாலது.
பெண்ணாம் தனக்கே இந்நிலை எனில் ஆடவர் நிலையைக் கூற இயலாது
என்று எண்ணுவாள்.

     பெண் பிறந்தேனுக்கு என்றால் என்படும் பிறர்க்கு என்பது தொடர்
நிலைச் செய்யுட் பொருட்பேறணி.                               60