2792. | பொரு திறத்தானை நோக்கி, பூவையை நோக்கி, நின்றாள்; 'கருத மற்று இனி வேறு இல்லை; கமலத்துக் கடவுள்தானே, ஒரு திறத்து உணர நோக்கி, உருவினுக்கு, உலகம் மூன்றின் இரு திறத்தார்க்கும், செய்த வரம்பு இவர் இருவர்' என்றாள். |
பொரு திறத்தானை நோக்கி - போரில் வல்லமை பெற்ற இராமனைப் பார்த்து; பூவையை நோக்கி நின்றாள் - சீதையைக் கண்டு வியந்து நின்ற சூர்ப்பணகை; கருத மற்று இனி வேறு இல்லை - எண்ணிப் பார்க்க இனிமேல் வேறொன்றும் இல்லை; (யாதெனில்) கமலத்துக் கடவுள் தானே - தாமரை மலரில் விற்றிருக்கும் பிரமனும்; ஒருதிறத்து உணர நோக்கி - ஒப்பற்ற வகையில் ஆழ்ந்து நினைத்துப் பார்த்து; உருவினுக்கு உலகம் மூன்றின் - ஏற்றவடிவத்திற்கு இம் மூன்று உலகங்களிலும்; இவர் இருவர் இருதிறத்தார்க்கும் செய்த வரம்பு என்றாள் - இவர்கள் இருவரும் ஆடவர் பெண்டிர் ஆகிய இரு பாலர்க்கும் உண்டாக்கிய எல்லை ஆம் என எண்ணினாள். பூவை - நாகணவாய்ப் புள் போன்ற சொல்லையுடைய சீதை, ஆண் பெண் ஆகிய இரு வடிவத்தார்க்கும் பிரமன் படைத்த வரம்பாக இராமனும் சீதையும் அமைந்துள்ளனர். 'படைக்குநர் சிறுமை அல்லாமல் எண்பிறங்கு அழகிற்கு எல்லை இல்லை ஆம்' என முன்னர்க் (2791) காட்டியதற்கிணங்க 'வரம்பு இவர் இருவர்' என்றார். பூவை - உவமை ஆகுபெயர். 61 |