2793.'பொன்னைப்போல் பொரு இல் மேனி,
     பூவைப் பூ வண்ணத்தான், இம்
மின்னைப்போல் இடையாளோடும் மேவும்
     மெய் உடையன் அல்லன்;
தன்னைப்போல் தகையோர் இல்லா,
     தளிரைப்போல் அடியினாளும்,
என்னைப்போல் இடையே வந்தாள்;
     இகழ்விப்பென் இவளை' என்னா,

    பூவைப்பூ வண்ணத்தான் - காயாம்பூப் போன்று கரிய நிறத்தையும்
உடைய இவன்; பொன்னைப் போல் பொரு இல் மேனி இம்
மின்னனைப் போல் இடையாளோடும் மேவும் மெய் உடையன்
அல்லன் -
பொன் போன்று ஒப்புக் கூறுதற்கு இல்லாமல் ஒளிவீசும்
உருவத்தையும் இந்த மின்னல் போன்ற நுண்ணிய இடையையும் உடைய
இப்பெண்ணோடு மணந்த உடம்பை உடையவன் அல்லன் (இவன்
கணவனல்லன்); தன்னைப் போல் தகையோர் இல்லா - தன்னைப் போல
அழகு உள்ளவரைப் பெறாத ஒப்பற்ற; தளிரைப் போல் அடியினாளும் -
இளந்தளிர் போன்ற மெல்லிய செவ்வடிகளை உடைய இப்பெண்ணும்;
என்னைப் போல் இடையே வந்தாள் - என்னைப் போன்று (இவன் மேல்
ஆசை கொண்டு) இடையில் வந்தவளாவள்; இவளை இகழ்விப்பென்
என்னா -
இகழும்படி செய்வேன் என்று எண்ணி,

     தகையோர் - அழகியோர் என்பர். தகுதி உடையோர் எனவும்
உரைப்பர். தன்னைப் போல் தகைப் படாதவர் (அடக்கப் படாதவர்) என்று
சூர்ப்பணகை தன்னியல்புக்கு ஏற்பச் சீதை குறித்தும் எண்ணினாள் என்பர்.
பொன் மேனியும் காயாம் பூ போன்ற மேனியும் உடைய இவர் நிறத்தால்
வேறுபட்டிருப்பதால் மணம் புரிந்தவர்களாக இருத்தல் இயலாது என
எண்ணினாள். கரிய நிறம் கொண்ட தான் கரிய நிற இராமனுக்கு ஏற்றவள்
என்பது இதனால் குறிப்பாக வெளிப்படும். எனினும் சீதையின் மெல்லிய
தன்மையை உணர்ந்தும் தன்போல் இடையே வந்தவளாதலின் அவளை
இகழ்ச்சியுறச் செய்து இராமனிடமிருந்து இவளை நீக்குவேன் என எண்ணும்
உள்ளத்தில் பொறாமையும் அதனால் பிறர் பழி கூறும் தீய பண்பும்
புலப்படும்.                                                   62