சூர்ப்பணகை, சீதையை அரக்கி எனல் 2794. | 'வரும் இவள் மாயம் வல்லள்; வஞ்சனை அரக்கி; நெஞ்சம் தெரிவு இல; தேறும் தன்மை, சீரியோய்! செவ்விது அன்றால்; உரு இது மெய்யது அன்றால்; ஊன் நுகர் வாழ்க்கையாளை வெருவினென்; எய்திடாமல் விலக்குதி, வீர!' என்றாள். |
சீரியோய்! வீர! - நற்பண்பும் செய்கையும் உடையவனே! வீரனே!; வரும் இவள் மாயம் வல்லள் - (உன்னிடம்) வரும் இப்பெண் மாயையில் தேர்ச்சி பெற்றவள்; வஞ்சனை அரக்கி - வஞ்சகத் தன்மை கொண்ட இராக்கதப் பெண் ஆவாள்; நெஞ்சம் தெரிவு இல - இவள் எண்ணங்கள் அறிய முடியாதவை; தேறும் தன்மை செவ்விது அன்று - இவளை நல்ல பெண் எனத் துணியும் இயல்பு நல்லது அன்று; உரு இது மெய்யது அன்று - இவள் கொண்ட இவ் அழகிய உருவமும் உண்மை அன்று; ஊன்நுகர் வாழ்க்கையாளை வெருவினென் - தசையை உண்டு வாழும் வாழ்க்கையையுடைய இவளைக் கண்டு அஞ்சினேன்; எய்திடாமல் விலக்குதி என்றாள் - அருகே வராமல் இவளைத் தடுத்து அப்பால் செலுத்துவாய் எனக் கூறினாள்; ஆல் - அசை. முன்னரே சூர்ப்பணகையை 'மெய்இலாள்' (2774) என்றும் 'பொய்ம் மகள்' (2778) என்றும் கூறியதற்கேற்ப இங்குச் சீதையையே இராமனிடம் மாயம் வல்லள், வஞ்சனை அரக்கி, ஊன் நுகர் வாழ்க்கையாள் எனப் பொய்யாகச் சூர்ப்பணகை பழி கூறுகின்றாள். தன்னை இராமன் 'எயிறுடை அரக்கி, எவ்வுயிரும் இட்டது ஓர் வயிறுடையாள் என மறுக்கும்' என (2760) எண்ணித் தன் வடிவை மாற்றிக் கொண்ட 'வஞ்சமகள்' (2762) சூர்ப்பணகை ஆதலால் சீதையை அவ்வாறு கூறி இராமன் வெறுக்குமாறு செய்ய வழி காண்கிறாள். மேலும் அஞ்சுகிற பெண்களுக்கு அபயம் கொடுப்பதே வீரரின் பண்பாகும். எனவே இராமனை 'வீர' என விளிக்கிறாள் 'சீரியோனாம்' இராமன் மெய்யில் உருவு கொண்டவளை நல்லவள் எனக் கொள்வது அவன் பண்புக்கு ஏற்ற தன்று எனவும் குறிப்பால் சுட்டுவாள். வெருவினென் - இறந்த கால வினைமுற்று நிகழ்காலப் பொருளில் வந்தது, கால வழுவமைதி. 63 |