2795. | 'ஒள்ளிது உன் உணர்வு; மின்னே! உன்னை ஆர் ஒளிக்கும் ஈட்டார்? தெள்ளிய நலத்தினால், உன் சிந்தனை தெரிந்தது; அம்மா! கள்ள வல் அரக்கி போலாம் இவளும்? நீ காண்டி' என்னா, வெள்ளிய முறுவல் முத்தம் வெளிப்பட, வீரன் நக்கான். |
வீரன் - வீரனாம் இராமன்; மின்னே - மின்னல் போன்ற பெண்ணே!; உன் உணர்வு ஒள்ளிது - உன்னுடைய அறிவு ஒளி மிக்கது; உன்னை ஆர் ஒளிக்கும் ஈட்டார் - உன்னை யார் வஞ்சித்து மறையும் ஆற்றல் உள்ளவர்?; தெள்ளிய நலத்தினால் உன் சிந்தனை தெரிந்தது - தெளிவான உன் அறிவுச் சிறப்பால் உன் ஆலோசனை இவ்வுண்மையை அறிந்தது; அம்மா - இது வியப்பாம்; இவளும் கள்ளவல் அரக்கி போலாம் நீ காண்டி - இங்கு வரும் இப் பெண் திருட்டுத்தனமிக்க கொடிய இராக்கதப் பெண் போலும் நீ இவளை நன்கு பார்; என்னா வெள்ளிய முறுவல் முத்தம் வெளிப்பட நக்கான் - என்று கூறி வெண்மையான தன் பற்களாம் முத்துக்கள் வெளியே தோன்றச் சிரித்தான். ஒள்ளிது - சிறப்புடையது எனவுமாம். இதனைக் கன்னட மொழிச் சொல் என்பர். ஈட்டார் - வலிமையுடையார். காண்டி - நீயே குறிப்பாகப் பார்த்துக் கவனித்துக் கொள் எனும் குறிப்புப் பொருள் கொண்டது. உண்மையில் இராமன் சூர்ப்பணகையே அறியாமை உடையவள்; அறிவுத் தெளிவு இல்லாதவள்; சீதை உண்மையில் அரக்கி அல்லள் - என்ற பொருள்பட எதிர்மறையாகக் கூறி அவளை வஞ்சப் புகழ்ச்சி செய்தான். இது இராமனின் 'உண்டாட்ட'த்தின் (2787) கொடு முடியாகும். இராமன் புன் சிரிப்பை முதலில் 'அகத்துறு நகையின் வெள்ளைக் குருத்து' எனவும் (2782) 'வாள் எயிறு இலங்க நக்கான்' எனவும் (2787) கூறி இங்கு 'வெள்ளிய முறுவல் முத்தம் வெளிப்பட வீரன் நக்கான்' எனக் கூறியதால் இராமனின் நகையுணர்வின் வளர்நிலை செயல் விளக்கமாகப் புலப்படும். அம்மா - வியப்பிடைச் சொல். போல் - அசைநிலை ஒப்பில் போலி எனவுமாம். இப்பாடலில் வஞ்சப் புகழ்ச்சி அணி உளது. 64 |