சீதையைச் சூர்ப்பணகை வெகுளலும், இராமன் அவளைக் கடிதலும்

2796. ஆயிடை, அமுதின் வந்த, அருந்ததிக்
     கற்பின் அம் சொல்
வேய் இடை தோளினாளும், வீரனைச்
     சேரும் வேலை,
'நீ இடை வந்தது என்னை? நிருதர்தம்
     பாவை!' என்னா,
காய் எரி அனைய கள்ள
     உள்ளத்தாள் கதித்த லோடும்.

    ஆயிடை - அந்த நேரத்தில்; அமுதின் வந்த அருந்ததிக் கற்பின்
அம் சொல் வேய்இடை தோளினாளும் -
தேவரமுது போல் வந்த
அருந்ததிபோல் கற்பின் சிறப்பையும் அழகிய இனிய சொற்களையும்
மூங்கில் பின்னிடும் படி அழகிய தோள்களையும் உடைய சீதை; வீரனைச்
சேரும் வேலை -
வீரனாம் இராமனை அணுகும் போது; நிருதர்
தம்பாவை நீ இடை வந்தது என்னை -
அரக்கர் பெண்ணே! எங்களுக்கு
இடையில் நீ குறுக்கிட்டது ஏன்; என்னா காய் எரி அனைய கள்ள
உள்ளத்தாள் கதித்தலோடும் -
என்று கூறிப் பற்றி எரியும் தீப் போன்ற
வஞ்சக எண்ணத்தாளாம் சூர்ப்பணகை சினந்து வேகமாக வந்ததும்.

     அமுதின் வந்த - திருப்பாற் கடலில் அமுதத்துடன் தோன்றிய
(திருமகளாம் சீதை) எனவும் ஆம். அமுதின் வந்த அம் சொல் எனக்
கூட்டுவாரும் உளர். கிட்கிந்தா காண்டத்தில் தாரையைப் பற்றிக்
கூறும்போது 'ஆயிடை, தாரை என்று அமிழ்தின் தோன்றிய வேயிடைத்
தோளினாள்' (3956) என்பார். அதனை இங்கு ஒப்பிடற் பாலது 'அருந்ததிக்
கற்பு' என இங்குக் கூறியது போன்றே வனம் புகு படலத்தில் இராமன்
சீதையை அருந்ததி அனையாளே' (2006) என விளிப்பான். வேலை -
சமயம், பொழுது, காலம். கதித்தல் - விரைந்து செல்லல். சீதையை அமுது
என்பதால் சூர்ப்பணகை தீய நஞ்சாகிறாள். இரண்டும் முரண்பட இங்கு
அமையும் நாடகப் பாங்கு சுவைத்தற்குரியது.

     ஆயிடை - அகரச் சுட்டு செய்யுள் விகாரமாய் நீண்டது. பாவை -
அண்மை விளி இது இயல்பாய் நின்றது.                           65