2797. | அஞ்சினள்; அஞ்சி அன்னம், மின் இடை அலச ஓடி, பஞ்சின் மெல் அடிகள் நோவப் பதைத்தனள்; பருவக் கால மஞ்சிடை வயங்கித் தோன்றும் பவளத்தின் வல்லி என்ன, குஞ்சரம் அனைய வீரன் குவவுத் தோள் தழுவிக் கொண்டாள். |
அஞ்சினள் - (சூர்ப்பணகை அருகே வரக்கண்டு) அச்சமுற்றவளாம் சீதை; அஞ்சி அன்னம் மின் இடை அலச ஓடி - அச்சுற்று அன்னப் பறவை தன் மின்னல் போன்ற இடை தள்ளாட ஓடிச் சென்று; பஞ்சின் மெல் அடிகள் நோவப் பதைத்தனள் - பஞ்சுபோலும் மென்மையான பாதங்கள் வருத்தத் துடித்தவளாய்; பருவக்கால மஞ்சிடை வயங்கித் தோன்றும் பவளத்தின் வல்லி என்ன - கார் காலத்தில் தோன்றும் கரிய மேகத்திடையே தோன்றும் சிவந்த பவளக்கொடி போல; குஞ்சரம் அனைய வீரன் குவவுத் தோள் - யானை போன்ற வீரனாம் இராமனின் திரண்ட தோள்களை; தழுவிக் கொண்டாள் - அணைத்துக் கொண்டாள். இடைக்கு மின்னல் உவமையாம் நுட்பமும் ஒளி வீசும் தன்மையாலும் ஒப்பாம். அலசல் - தள்ளாடுதல் மந்திரப் படலத்தில் இராமனை வேண்டும் தயரதன் 'ஐய! சாலவும் அலசினென்' (1374) என்பான் இப்பொருள்பட இராமனுக்குக் கார் கால மேகமும் சீதைக்குப் பவள வல்லியும் ஒப்பாம். அச்சத்தால் விளையும் செயலைக் கூறிச் சீதை இராமனைத் தழுவும் பாங்கில் அது அடைக்கலம் பூணும் நிலையை உணர்த்தும். மேகம் கடல் நீரைப் பருகிய போது பவளக் கொடியும் சேர்ந்து வந்தது என்பாருமுளர். இது இல்பொருளுவமை அணி. 66 |