2800.'தன்னொடும் தொடர்வு இலாதேம்
     என்னவும் தவிராள்; தான்இக்
கல் நெடு மனத்தி சொல்லும், கள்ள
    வாசகங்கள்' என்னா,
மின்னொடு தொடர்ந்து செல்லும்
     மேகம்போல், மிதிலை வேந்தன்
பொன்னொடும் புனிதன் போய், அப்
     பூம் பொழிற் சாலை புக்கான்.

    இக்கல் நெடு மனத்தி தன்னொடும் - இந்தக் கல் போன்ற கடின
மனம் கொண்ட இவளோடும்; தொடர்வு இலாதேம் என்னவும் தவிராள் -
எத்தகைய தொடர்பும் இல்லாதவர் எனக் கூறியும்; தான் - இவள் தானும்,
கள்ள வாசகங்கள் சொல்லும் என்னா - வஞ்சகச் சொற்களை இவள்
மேலும் சொல்லுவாள் என்று எண்ணி; புனிதன் - தூயோனாம் இராமன்;
மின்னொடு தொடர்ந்து செல்லும் மேகம் போல் - மின்னல் பின்னே
தொடர மேகம் முன்னே செல்வது போல்; மிதிலை வேந்தன்
பொன்னொடும் போய் அப்பூம் பொழிற் சாலை புக்கான் -
மிதிலை
மன்னனாம் சனகனின் மகள் சீதையுடன் சென்று அந்த அழகிய
சோலையிலுள்ள பன்ன சாலைக்குள் புகுந்தான்.

     கல் நீரிலே கிடப்பினும் அதன் ஈரத்தைப் பெறாதிருக்கும் அது போல்
அரக்கரும் இரக்கமற்ற பண்பினராம். 'வைகலும் நீருட்கிடப்பினும் கல்லிற்கு
மெல்லென்றல் சால அரிதாகும் - அஃதே போல வைகலும் நல்லறம்
கேட்பினும் கீழ்கட்குக் கல்லினும் வல்லென்னும் நெஞ்சு' (அறநெறிச் சாரம்
51) என்ற பாடலின் கருத்தை இத்துடன் ஒப்பிடலாம்.

     தொடர்பு இலாதேம் குலம், கல்வி, பிறப்பு, பண்பு முதலிய
எவ்வகையிலும் தொடர்பு இல்லாதவர்கள். கள்ள வாசகங்கள் - வஞ்சகச்
சொற்கள். மின்னலும் மேகமும் இணைந்த கருத்தினை ஒட்டி முன்னரே
'பருவக்கால மஞ்சிடை வயங்கித் தோன்றும் பவளத்தின் வல்லி' (2797) என
வருதல் காண்க. மிதிலையை மிதி என்ற மன்னன் ஆண்டதால் அந்நகருக்கு
இப்பெயர் வந்தது. பொன் - தன்மையாலும் அருமையாலும் சுடச் சுட
ஒளிர்வதாலும் சீதைக்கு ஒப்பாயிற்று. பிற மாதரைச் சிந்தையாலும்
தீண்டாததால் இராமன் புனிதன் எனப்பட்டான். இதில் உவமை அணி
உளது.                                                     69