| 2802. | நின்றிலள்; அவனைச் சேரும் நெறியினை நினைந்து போனாள்; 'இன்று, இவன் ஆகம் புல்லேன்எனின், உயிர் இழப்பென்' என்னா, பொன் திணி சரளச் சோலை, பளிக்கறைப் பொதும்பர் புக்காள்; சென்றது, பரிதி மேல் பால்; செக்கர் வந்து இறுத்தது அன்றே. |
நின்றிலள் அவனைச் சேரும் நெறியினை நினைந்து போனாள் - (சூர்ப்பணகை) அங்கு நிற்காமல் இராமனைத் தான் அடைந்து பெறும் வாழ்வை எண்ணி அவ்விடம் விட்டுச் சென்றவள்; இன்று இவன் ஆகம் புல்லேன் எனின் உயிர் இழப்பென் என்னா - இன்று நான் இவன் மார்பைத் தழுவவில்லை என்றால் என் உயிரை விடுவேன் என்று எண்ணி; பொன் திணி சரளச் சோலை பளிக்கறைப் பொதும்பர் புக்காள் - பொன் அடர்ந்துள்ள தேவதாரு மரங்கள் நிறைந்த சோலையைக் கடந்து பளிங்கு மண்டபம் அமைந்த சோலையுள் புகுந்தாள்; பரிதி மேல் பால் சென்றது - கதிரவன் மேற்றிசையில் சென்று மறைந்தான்; செக்கர் வந்து இறுத்தது - அங்குச் செவ்வானம் வந்து சேர்ந்தது அன்று, ஏ - அசைகள். ஆகம் - உடல் எனலும் ஆம். இராமனைச் சேராவிடில் உயிர் இழப்பேன் எனக் கூறியது கொண்டு சூர்ப்பணகையின் விரக வேதனை புலப்படும். பளிக்கு அறை எனக் கொண்டு பளிங்குப் பாறை என்பாருமுளர். 'அகலறை' என்பதற்கு அகன்ற பாறை என நச்சினார்க்கினியர் உரை காண்பர் (மலைபடு கடாம், 133) திருமால் வீற்றிருக்கும் நூற்றெட்டுத் தலங்களில் திருவெள்ளறை என்ற தலத்தில் வெண்பாறையில் கோயில் அமைந்திருப்பதையும் சான்று கூறுவர். சூர்ப்பணகையின் ஒரு தலைக் காமம் மேலும் பெருகுதற்கு மாலை நேரமும் செவ்வானமும் துணை செய்கின்றன. பொதும்பர் என்பதைக் குறுங்காடு எனவும் கூறுவர். 71 |