2805. | கலை உவா மதியே கறி ஆக, வன் சிலையின் மாதனைத் தின்னும் நினைப் பினாள், மலையமாருத மா நெடுங் கால வேல் உலைய மார்பிடை ஊன்றிட, ஓயு மால். |
கலை உவா மதியே கறி ஆக - பதினாறு கலைகள் நிறைந்த முழு மதியே உணவுக்குத் தொடு கறி ஆக; வன் சிலையின் மாரனைத் தின்னும் நினைப்பினாள் - வலிய கரும்பு வில்லையுடைய மன்மதனை உண்ணும் எண்ணமுடையவளானாள் சூர்ப்பணகை; மலைய மாருதமா நெடுங் காலவேல் உலைய - பொதிகைத் தென்றல் பெரிய நீண்ட யமனின் சூலம் வருந்தும்படி; மார்பிடை ஊன்றிட ஓயும் - தன் மார்பிலே அழுந்தித் தைக்கச் செயலற்றவளாய் ஒடுங்கினாள். ஆல் - அசை. உவா - அமாவாசை பௌர்ணமி இரண்டிற்கும் உரியது. மதி எனத் தொடர்ந்து வந்ததால் இது பௌர்ணமியைச் சுட்டிற்று. கறி - கறிக்கப்படுவது. இதற்கு 'அரிமா கொடிப்புல் கறிக்குமோ' (நாலடி. 141) என்ற தொடரை ஒப்பிடலாம். கரி எனப் பாடம் கொளின் சான்றுமாம். காமன் வில்லாம் கரும்பு மெல்லியது எனினும் காமமூட்டும் செயலால் வலியதாயிற்று. தென்றலும் மதியும் காமுற்றோரை வருத்தும் என்பது நூன் மரபு. அரக்க குணத்திற்கேற்பத் தன்னைத் துன்புறுத்தும் மதியைத் தின்னச் சூர்ப்பணகை எண்ணும் போதே தென்றலாம் சூலம் அவளைச் சாய்த்தது. ஒன்றைச் செய்ய நினைக்கும் போது மற்றொரு செயல் அதனைச் செய்ய விடாமல் தடுக்கும் என்பதை இந்நிலை காட்டும். இவ்வாறே பின்னும் தொடர்ந்து காணப் பெறும். பஞ்சவடியில் இராமனைச் சூர்ப்பணகை கண்டது முழுநிலாக் காலம் என்பது இதனால் புலனாம். தென்றல் சூலமாக உருவகம் செய்யப்பட்டதால் உருவக அணி இப் பாடலில் அமைந்துள்ளது. 74 |