2806. அலைக்கும் ஆழி அடங்கிட,
     அங் கையால்,
மலைக் குலங்களின், தூர்க்கும்
     மனத் தினாள்;
நிலைக்கும் வானில் நெடு மதி
     நீள் நிலா
மலைக்க, நீங்கும் மிடுக்கு
     இலள்; மாந்துவாள்.

    அலைக்கும் ஆழி அடங்கிட - தன்னை வருத்தும் கடல்
ஓசையின்றி அடங்கிப்போக; அங்கையால் மலைக் குலங்களின் தூர்க்கும்
மனத்தினாள் -
தன் உள்ளங்கையால் மலைக் கூட்டங்களைக் கொண்டு
வற்றச் செய்யும் எண்ணம் கொண்டவளானாள்; (ஆனால்) வானில்
நிலைக்கும் நெடுமதி -
ஆகாயத்தில் விளங்கும் முழுமதி; நீள் நிலா
மலைக்க -
நீண்டு பரவிய நிலவொளி எதிர்த்து அழித்தலால்; நீங்கும்
மிடுக்கு இலள் மாந்து வாள் -
தப்பும் வலிமை குறைந்தவளாய் மனம்
வருந்துவாள்.

     அலைக்கும் ஆழி - அலை வீசும் கடலுமாம். அலை ஓசை
காமுற்றவரைத் தூங்க விடாமல் வருத்தும். அதனால் கடல் நீரைத்
தூர்க்கவும் மலைகளைத் தன் உள்ளங்கையால் எடுத்துப் போட்டு
அடக்கவும் எண்ணினாள். நிலாவோ கடலில் தோன்றிய உறவுமுறை
உடையது. எனவே தன் தாயாம் கடலைச் சூர்ப்பணகை தூர்க்காமல் காக்கத்
தன் நிலவால் அவளுடன் மலைத்தது. தாயைக் காக்க மகன் போர் புரியும்
செயல் இங்கு நினைத்தற்குரியது.

     'நீள் நிலா வலைக்கு நீங்கும்' என்ற பாடம் ஓதி அதற்கு நீண்டு
பரவியுள்ள நிலாவாகிய வலையிலிருந்து தப்பிச் செல்லும் எனப் பொருள்
காண்பர். இப்பாடலில் முன்னர்த் தப்பிய முழுமதி (2805) கடலைத் தூர்க்கச்
சூர்ப்பணகையின் செயலைத் தடுத்தது என்பது எண்ணுதற்குரியது.      75