2808.'அணைவு இல் திங்களை
     நுங்க, அராவினைக்
கொணர்வென், ஓடி' எனக்
     கொதித்து உன்னுவாள்;
பணை இன் மென்
     முலைமேல் பனி மாருதம்
புணர, ஆர் உயிர்
     வெந்து புழுங்குமால்.

    அணைவு இல் திங்களை நுங்க - தனக்கு இணக்கமாக இல்லாத
சந்திரனை விழுங்க; அராவினை ஓடிக் கொணர்வென் எனக் கொதித்து
உன்னுவாள் -
இராகு கேது எனும் பாம்புகளை ஓடிச் சென்று
கொண்டுவருவேன் என்று கோபத்தால் கொதிப்படைந்து எண்ணுவாள்;
(ஆனால்) பணை இன் மென் முலை மேல் பனிமாருதம் புணர - தனது
பருமையும் இனிமையும் மென்மையும் கொண்ட கொங்கைகள் மீது குளிர்ந்த
காற்று வீசிப்படிய; ஆர் உயிர் வெந்து புழுங்கும் - தன் அரிய உயிர்
காமச் சூட்டால் வெந்து வருந்துவாள் (சூர்ப்பணகை); ஆல் - அசை.

     கலவியிற் கூடினவர்க்கு இன்பமூட்டும் சந்திரன் காமத்தால்
வருந்துவோர்க்குத் துன்பம் செய்வான். அதற்கு அவனை விழுங்கும் இராகு
கேது எனும் கரும்பாம்பு செம்பாம்புகளைப் பற்றிக் கொணர்ந்தால் அவை
சந்திரனை விழுங்கி விடத் தனக்குத் துன்பம் நேராது எனச் சூர்ப்பணகை
எண்ணினாள். அப்போது குளிர்ந்த காற்று அவள் மீது பட்டு மேலும்
துன்புறுத்தியது. பாம்பைக் கொண்டு வர எண்ணியதும் அதன் உணவாம்
காற்றும் அவளை வருத்தத் தொடங்கியது. பாம்பு மதியை விழுங்குவது
என்பது புராண மரபு.

     தன்னை வருத்தும் காற்றையும் தான் கொண்டு வரும் பாம்பு
உண்ணும். அதனால் தனக்கு வருத்தம் நேராது எனக் கருதினாள் என்று
கொள்ளற்கும் இடமுளது.                                       77