2809. | கைகளால், தன் கதிர் இளங் கொங்கைமேல், ஐய தண் பனி அள்ளினள், அப்பினாள்; மொய் கொள் தீயிடை வெந்து முருங்கிய வெய்ய பாறையில் வெண்ணெய் நிகர்க் குமால். |
தன் கதிர் இளம் கொங்கை மேல் - (சூர்ப்பணகை தன் காமத் தீயைத் தணிப்பதற்காக) தனது ஒளி மிக்க இளமையான முலைகள் மீது; கைகளால் ஐய தண்பனி அள்ளினள் அப்பினாள் - தன்னிரு கரங்களால் மிக நுட்பமான குளிர்ந்த பனிக் கட்டிகளை அள்ளி எடுத்து அப்பிக் கொண்டாள்; (ஆனால்) மொய்கொள் தீயிடை வெந்து - வலிமையால் பற்றிப் பரவிய காமமாம் தீயிடத்தே வெந்து; முருங்கிய வெய்ய பாறையில் வெண்ணெய் நிகர்க்கும் - காய்ந்த சூடான பாறை மேல் இட்ட வெண்ணெய் போன்று உருகி அழிந்தது. ஆல் - அசை. தீயானது சூர்ப்பணகை கொண்ட காமத்திற்கும், வெய்ய பாறை அவளுடைய முலைகளுக்கும், பனியானது வெண்ணெய்க்கும் உவமையாயின. பனி என்பதைப் பனிக் கட்டியாகக் கொள்ளலாம். ஐய என்பதற்கு மென்மையான எனவும் பொருள் கூறுவர். வெய்ய பாறையில் வெண்ணெய் உருகியது போலப் பனிக்கட்டியும் சூர்ப்பணகையின் தனங்களின் காம வெப்பத்தால் உருகியொழிந்தது. இவ்வுவமையின் அழகைக் குறுந்தொகையில் (58) 'ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்... வெண்ணெய் உணங்கல் போல' என்ற உவமையுடன் ஒப்பிட்டு இன்புறலாம். பனிக்கட்டியை அப்பிக் காம வெப்பிலிருந்து தப்ப நினைத்தும் அது பலிக்கவில்லை. 78 |