2811. | வந்து கார் மழை தோன்றினும், மா மணிக் கந்து காணினும், கைத் தலம் கூப்புமால்; இந்துகாந்தத்தின் ஈர நெடுங் கலும் வெந்து காந்த, வெதுப் புறு மேனியாள். |
இந்து காந்தத்தின் ஈர நெடுங்கலும் - சந்திர காந்தம் எனும் குளிர்ந்த பெரும் கல்லும்; வெந்து காந்த வெதுப்புறு மேனியாள் - தன் மேல் படச் சூடுண்டு கருகும் வண்ணம் வெப்பமுற்ற உடலை உடைய சூர்ப்பணகை; கார் மழை வந்து தோன்றினும் - கரிய மேகம் தன் முன்னே வந்து தென்பட்டாலும்; மாமணிக் கந்து காணினும் - நீல மணியால் ஆகிய தூணை எதிரே கண்டாலும்; கைத்தலம் கூப்பும் - கைகுவித்து வணங்குவாள்; ஆல் - அசை. இந்து காந்தம் - சந்திர காந்தம் எனும் ஒருவகைக்கல். இது சந்திரனின் முன்னே நீரை உமிழும் தன்மையுடையது. கந்து - தறி எனவும் கூறுவர். கார் மழையையோ நீலக்கந்துவையோ கண்டதும் கை தொழக் காரணம் அவற்றைக் கண்டதும் இராமனைக் கண் முன்னே கண்ட மெய்ப்பாட்டை உறுவதாம். அசோக வனத்தில் சீதை 'அரிய மஞ்சினோடு அஞ்சனம் முதல் இவை அதிகம் கரிய காண்டலும் கண்ணின் நீர் கடல்புகக் கலுழ்வாள்' (5075) என்பதும் இராமனைக் கரிய பொருள்களில் சீதை கண்ட நிலையாம். நாலாம் திருவாய்மொழி 'மண்ணை' எனத் தொடங்கி 'நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலே வாவென்று கூவும் நன்று பெய்யும் மழை காணில் நாரணன் வந்தான் என்று ஆலும் (4.4.4) 'கரும் பெரு மேகங்கள் காணில் கண்ணன் என்றே பறக்கும்' (4.4.9) அடிகளில் தலைவி படும் பாடு இந்நிலையைச் சுட்டும். 80 |