2812. | வாம மா மதியும், பனி வாடையும், காமனும், தனைக் கண்டு உணரா வகை, நாம வாள் எயிற்று ஓர் கத நாகம் வாழ் சேம மால் வரையின் முழை சேருமால். |
வாம மா மதியும் - அழகுமிக்க முழு மதியமும்; பனி வாடையும் - குளிர்ந்த காற்றும்; காமனும் தனைக் கண்டு உணரா வகை - மன்மதனும் தன்னைப் பார்த்து அறியாதபடி; நாமவாள் எயிற்று ஓர் கத நாகம் வாழ் சேமமால் வரையின் முழை சேரும் - அச்சம் தரும் கூரிய நச்சுப் பல்லுடைய ஒருநாகப் பாம்பு வாழ்கின்ற பாதுகாவலாக உள்ள பெரிய மலையின் குகையுள் சென்று சேர்ந்தாள்; ஆல் - அசை. சூர்ப்பணகை தனக்குத் துன்பம் செய்யும் சந்திரன், காற்று, மன்மதனிடமிருந்து தப்பப் பாம்பு வாழும் குகையைப் பாதுகாப்பான இடமாக நாடிச் சென்றாள். பாம்பு தன்னை உண்ணும் எனச் சந்திரனும் காற்றும் அங்குச் செல்லா. மன்மதனும் தன்னைச் சுட்டெரித்த சிவனின் அணிகலன் பாம்பு ஆதலால் அது வாழுமிடத்திற்குச் செல்லான் என்பது கருத்து. 'நாகமாய்' எனப் பாடம் கொண்டு நாகப் பாம்பின் வடிவோடு என்று சூர்ப்பணகை பாம்பு வடிவு பூண்டதாகக் கொள்வர். அதற்குச் சான்றாக அடுத்த பாடலில் (2813) காணும் 'முன்ன மேனியளாய்' என்ற தொடரைக் காட்டுவர். 81 |